சவூதியில் 5 வயது சிறுமிக்கு 70 சத்திர சிகிச்சை
சவூதி அரேபியாவில் ஐந்து வயதுச் சிறுமி ஒருவருக்கு மூன்று வருடங்களுக்குள் 70 க்கும் மேற்பட்ட சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் அச் சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.
இதனால் உரிய மருத்துவ சிகிச்சையினை வெளிநாட்டில் பெற்றுக்கொள்ள உதவுமாறு சம்பந்தப்பட்ட சவூதி அதிகாரிகளிடம் அச் சிறுமியின் தந்தையான ஹுஸைன் அல்-கிதைஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது மகள் இரண்டு வயதாக இருக்கும்போது எரியும் தன்மை கொண்ட பொருளொன்றை விழுங்கியதாகவும் அதன் காரணமாக தனது மகளின் உணவுக்குழாய் மற்றும் வயிற்றுப் பகுதியில் பாரதூரமான எரிகாயங்கள் ஏற்பட்டதாகவும் ஹுஸைன் அல் கிதைஷ் தெரிவித்ததாக அல் வதான் செய்தி வெளியிட்டுள்ளது.
விழுங்கிய பொருள் என்னவென்று குறிப்பாக அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் சம்பவம் நடைபெற்றதிலிருந்து தனது மகள் சாதாரண நிலைக்குத் திரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தனது மகளால் எதுவும் சாப்பிடவும் முடியாது, குடிக்கவும் முடியாது. அவருக்கு மூக்கு வழியாகப் பொருத்தப்பட்டுள்ள குழாய் மூலமாகவே உணவளிக்கப்படுகிறது எனவும் அல் கிதைஷ் தெரிவித்தார்.
எனது மகள் ஷஹாத் முதலில் அல்-கொபாரில் அமைந்துள்ள சாத் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு இரண்டு வாரங்களாக செயற்கைச் சுவாசம் அளிக்கப்பட்டது. பின்னர் அதே நகரத்திலுள்ள போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அதன் பின்னர் றியாதிலுள்ள மன்னர் பஹத் மருத்துவ நகருக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உணவுக்குழாய் மற்றும் வயிற்றுப் பகுதியை விரிவுபடுத்துவதற்காக இரு வாரங்களுக்கு ஒரு தடவை எண்டொஸ்கோபிக் முறையிலான சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
உணவுக்கான குழாயொன்று அவரது வயிற்றில் பொருத்தப்பட்டது. இரண்டரை வருடங்களாக எவ்வித முன்னேற்றமும் இன்றி அதே நிலையில்தான் இருக்கின்றார். என அல்-கிதைஷ் கவலையுடன் தெரிவித்தார்.
விரிவுபடுத்துவதற்கான எண்டொஸ்கோபிக் முறையிலான சத்திர சிகிச்சையின்போது உணவுக்குழாய் பகுதி சிறு பகுதிகள் வெட்டி எடுக்கப்படும்போது நிலைமை மேலும் மோசமடைகின்றது.
றியாதிலுள்ள மன்னர் பஹத் மருத்துவமனையில் மாத்திரம் எனது மகளுக்கு விரிவுபடுத்துவதற்கான சுமார் 50 சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அல்-கிதைஷ் தெரிவித்தார்.
அதன் பின்னர் எனது மகள் றியாதிலுள்ள மன்னர் காலித் பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கும் பல்வேறு உணவுக்குழாய் மற்றும் வயிற்றுப் பகுதி மேம்பாட்டுக்கான சத்திர சிகிச்சைகள் நடைபெற்றன. ஆனால் எந்தவிதமான சாதகமான விளைவுகளும் ஏற்படவில்லை.
நாளுக்கு நாள் எனது மகளின் நிலைமை மோசமாகிக்கொண்டே வருகின்றது. அரசாங்க செலவில் மருத்துவ சிகிச்சைக்காக அவர் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என அத் தந்தை மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
M.I.Abdul Nazar
Post a Comment