ராஜபக்சர்களுக்கு ரணில் அடைக்கலம், UNP யின் வெற்றிக்காக பசில் களமிறக்கம்
ராஜபக்சர்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாகப் பிளவுப்படுத்துவதற்காகவே என்று ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்வரும் தேர்தல்களில் வெற்றி வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பசில் ராஜபக்ச நேரடியாகக் களத்தில் இறங்கியுள்ளதாக ஜே.வி.பியினர் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.
கடந்த ராஜபக்ச ஆட்சியில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் இன்று பிரதமர் ரணிலின் பின்னால் உள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் திருடர்கள் மாத்திரமே தற்போது இனங்காணப்பட்டுள்ளனர். அடுத்த தேர்தல் வரும்போது ஐக்கிய தேசியக் கட்சியின் திருடர்களும் வெளிவருவார்கள்.
தற்போது ஊழல் மோசடியை ஒழிக்கும் காரியாலயத்தை நிரந்தரமாக மூடவும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
அத்துடன், ஜனாதிபதியும், பிரதமரும் நேரடியாகத் தொடர்பு கொண்டு, அவரைக் கைதுசெய்யாதே, இவரைக் கைதுசெய் என உத்தரவுகளை விடுத்துவருகின்றனர்.
ராஜபக்சர்களுக்கு பிரதமர் ரணில் அடைக்கலம் கொடுத்துள்ளதால்தான் பசில் ராஜபக்ச தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கான வெற்றியைப் பெற்றுக்கொடுக்க நேரடியாகக் களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றார்.
மேலும், ராஜபக்சர்களைப் பாதுகாப்பதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாகப் பிளவுப்படுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்த பிரதமர் ரணில் காய்நகர்த்தி வருகின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment