இம்முறை கிழக்கு மாகாண தேர்தலிலும் SLMC + TNA யும் சேர்ந்தே ஆட்சியமைக்க வேண்டும் - பைசல் காசீம்
இம்முறையைப் போன்றே எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலிலும் த.தே.கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் சேர்ந்தே மாகாணசபை ஆட்சியை அமைக்க வேண்டும் என சுகாதார போசனை மற்றும் சுதேச மருத்துவ பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்தார்.
அம்பாறை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை வைபவ ரீதியாக பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ப.மோகனகாந்தன் தலைமையில் வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
கடந்த மாகாணசபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எமது முஸ்லிம் காங்கிரசும் இணைந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சியதிகாரத்தினை அமைப்பதற்கு எமது தலைவர் ஹக்கீம் முக்கிய காரணமாக இருந்தார்.
இவர் சம்பந்தன் ஐயாவுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளவர். இதனை பொறுக்காத சிலர் இவர்களது உறவினை உடைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
எந்த அரசியல் வாதி தங்களது சுயநலத்திற்காக அரசியல் செய்தாலும், தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் இந்த நாட்டில் ஒற்றுமையாக இருந்து செயற்பட வேண்டும் என்பதுதான் எமது விரும்பம் அப்போதுதான் இந்த மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.
வடக்கு கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் ஆளுநராக இருப்பவர்கள் அதிகளவான ஆதிக்கத்தினை கொண்டிருக்கின்றார்கள். ஆனால் ஏனைய மாகாணங்களில் உள்ள ஆளுநர்கள் அவ்வாறான ஆதிக்கம் செலுத்துவதில்லை இதனை நாங்கள் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும் என்றார்.
Post a Comment