IS தீவிரவாத அச்சுறுத்தலை, முறியடிக்க ஒத்துழைப்போம் - ஜம்இய்யத்துல் உலமா
ARA.Fareel
ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை தாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் நாட்டையும் நாட்டு மக்களையும் ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாக்கும்படியும் அமெரிக்கத் தூதரகம் அரசாங்கத்தை கோரியுள்ளதாக அறிகின்றோம்.
எவராவது ஒரு தனிநபர் தீவிரவாதத்துடன் தொடர்புடையவராக இருந்தால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாமும் அரசாங்கத்தை கோருகிறோம்.
எமது நாட்டை இவ்வாறான சமூகத்துக்கு எதிரான தீய செயல்களிலிருந்தும் பாதுகாப்பதற்கு அரச நிறுவனங்களுக்கு எமது உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறோம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது;
ஐ.எஸ். போன்ற இஸ்லாமிய போதனைகளுக்கு முரணாக செயற்படும் தீவிரவாத அமைப்புகளோடு எவராவது தொடர்புபட்டால் நாம் அதனை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இவ்வாறான அமைப்புகளுக்கும் இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதையும் உறுதியாகக் குறிப்பிடுகிறோம்.
இலங்கை முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களல்ல. உள்நாட்டில் உருவான தீவிரவாதத்துக்கும் முஸ்லிம்கள் ஆதரவு வழங்கவில்லை. இஸ்லாம் மனித இனத்திற்கு கருணை காட்டும் மார்க்கமாகும். அதன் அடிப்படை போதனைகளாக சமாதானம், அமைதி, பாதுகாப்பு மற்றும் சகோதரத்துவம் போன்றன காணப்படுகின்றன.
இஸ்லாம் ஒரு மனித உயிருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதென்றால் ஒரு தனி மனிதனுடைய கொலையை முழு சமூகத்தினதும் கொலையாக கருதுகின்றது. இஸ்லாம் போதிக்கின்ற சமாதானம், அமைதி, மற்றும் சகோதரத்துவம் என்பன சாதி, மத பேதமின்றி அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானவையாகும்.
இஸ்லாம் எமக்கு அனைத்து மனிதர்களுடனும் சமாதானமாகவும் நீதமாகவும் பொறுமையாகவும் நடந்து கொள்ளுமாறு ஏவுகின்றது. மேலும் அநியாயம் இழைத்தல், தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடல் போன்றவற்றை இஸ்லாம் மிக வன்மையாக கண்டிக்கின்றது. மேலும் குழப்பம் விளைவித்தல், கடும் போக்காக நடந்து கொள்ளுதல், கொலை செய்தல் ஆகியவற்றை பெரும்பாவங்களாகவும் குற்றங்களாகவும் இஸ்லாம் கருதுகின்றது.
எமது தாய் நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் செயற்பாடுகளிலும் இலங்கை சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகளிலும் இந்நாட்டு முஸ்லிம் சமூகம் ஒருபோதும் ஈடுபடப் போவதில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment