முஸ்லிம்களை கட்டாயம் வாக்காளர் இடாப்பில், பதிவு செய்யுமாறு கோரிக்கை
18 வயதுக்கு மேற்பட்ட இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் இம்முறை வாக்காளர் இடாப்பில் கட்டாயம் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அச் சம்மேளனத்தின் தேசிய தலைவர் பீ.எம். பாருக் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வாக்காளர் இடாப்பில் பெயர்களைப்பதிவு செய்வது தேர்தலில் வாக்களிப்பதற்கு மாத்திரமல்ல நாம் இந்நாட்டுப் பிரஜைகளென்று உறுதிப்படுத்தும் ஆவணமாகவும் அது அமைகிறது. அரசாங்க உத்தியோகம் மற்றும் தனியார் உத்தியோகம் முதல் அரசாங்கத்துடன் தொடர்புடைய சகல தேவைகளுக்கும் கிராமசேவகர் அத்தாட்சி அவசியமாகிறது.
இதற்கு தமது பெயர் வாக்காளர் இடாப்பில் பதியப்பட்டிருக்க வேண்டும். இலங்கை முஸ்லிம்கள் பல சவால்களை மேற் கொண்டுள்ள இக்கால கட்டத்தில் நாம் இலங்கை பிரஜைகள் என்று நிரூபிப்பதற்காக இப்பதிவு மிகமிக முக்கியமானது. அது எமது உரிமையும் கூட.
சில பெற்றோர்கள் தமது பிள்ளைகள் திருமணம் முடித்துச் சென்றாலும், வெளிநாடு சென்றாலும் அவர்களது பெயர்களைப் பதியாது இருந்துவிடுவதாக அறிகிறோம்.
இது தவறானது இவ்வாறு செய்தால் அவர்களின் பெயர்கள் எந்த இடத்திலும் பதிவு செய்யப்படுவதில்லை. அதே போன்று தாம் வசிக்கும் பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றாலும் கவனயீனமாகத் தமது பெயர்களைப் பதிவு செய்வதில்லை. இதனாலும் இரண்டு இடங்களிலும் அவர்கள் பதிவை இழக்கின்றார்கள்.
தாம் திருமணம் முடித்துச் சென்றாலோ வேறு பகுதிகளுக்குச் சென்றாலோ பதிவை மாற்றுவதற்கு பல விதி முறைகள் உள்ளன. அவர்கள் முன்னைய இடத்தில் பதிவு செய்யப்படவில்லை என்று அப்பகுதி கிராம உத்தியோகத்தரிடம் அத்தாட்சிப்படுத்தி தற்போது வசிக்கும் பகுதி கிராம உத்தியோகத்தருக்குக் கொடுத்து பதிவை மேற்கொள்ள வேண்டும்.
இவற்றை செய்வதற்கு கால அவகாசம் போதாமையினால் யாரேனும் பெற்றோர்கள் திருமணம் முடித்த அல்லது வெளிநாடு சென்ற பிள்ளைகளின் விபரங்களை அகற்றிப் படிவத்தைக் கையளித்திருந்தால் உடனடியாகத் தமது கிராம உத்தியோகத்தரை சந்தித்து அப்பெயர்களை மீண்டும் உட்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.
இது விடயமாக அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் மாவட்ட சம்மேளனங்களை தமது மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் சபை மூலமாக மக்களைத் தெளிவுபடுத்தி ஆவன செய்ய வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளார்கள்.
அதேபோன்று பள்ளிவாசல் நிர்வாகிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் இவ்விடயத்தில் முக்கிய கவனம் செலுத்தி சகல ஜமாஅத்தார்களினதும் பதிவை உறுதி செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment