Header Ads



இஸ்ரேலின் முற்றுகை, அப்பாஸ் அழுத்தம் - இருளில் மூழ்கியது காசா

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பலஸ்தீனின் காசா பகுதியில் உள்ள ஒரே ஒரு மின்சார உற்பத்தி நிலையமும் கடந்த புதன் இரவு மூடப்பட்டது. இதனால் அந்த கடலோரப் பகுதி முழுமையாக இருண்டுவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஹமாஸ் அமைப்பினால் நடத்தப்படும் மின்சார அதிகார சபை தென் காசா நகரில் இயங்கும் கடைசி இயந்திரத்தையும் நிறுத்தியதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பலஸ்தீன முற்றுகை பகுதியில் வசிக்கும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடந்த ஏப்ரல் நடுப்பகுதி தொடக்கம் மின்சார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். காசாவை ஆளும் ஹமாஸ் மற்றும் மேற்குக் கரையை தளமாகக் கொண்ட ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பலஸ்தீன அதிகார சபைக்கு இடையிலான முறுகலே இந்த பிரச்சினைக்கு காரணமாகும்.

கடந்த ஒரு தசாப்தமாக இஸ்ரேலின் முற்றுகையில் இருக்கும் நிலையில் அங்கு வாழும் மக்கள் தொடர்ந்து மின்சார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.

காசா மக்கள் அங்குள்ள ஒரே ஒரு மின்சார உற்பத்தி நிலையம் மற்றும் எகிப்து, இஸ்ரேலிடம் இருந்து நாளொன்றுக்கு மூன்று அல்லது நான்கு மணி நேரமே மின்சாரத்தை பெற்று வருகின்றனர்.

காசா பகுதிக்கு நாளாந்தம் 450 மெகாவோட்ஸ் மின்சாரம் தேவைப்படும் நிலையில் கடந்த மாதத்தில் நாளொன்றுக்கு வெறும் 150 மெகாவோட்ஸ் மின்சாரமே கிடைத்தது.

காசாவின் ஒரே மின்சார உற்பத்தி நிலையத்தில் இருந்து 60 மெகாவோட்ஸ் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. முன்னதாக போதிய எரிபொருள் இன்றி கடந்த ஏப்ரலில் மூடப்பட்டது. பலஸ்தீன அதிகார சபை, எரிபொருளுக்கான வரிச் சலுகையை அகற்றியதை அடுத்து எரிபொருள் இரட்டிப்பான நிலையிலேயே அந்த மின் உற்பத்தி நிலையம் முன்னர் மூடப்பட்டது.

மின் உற்பத்தி நிலையம் இயங்க இரு வாரத்திற்கு முன் எகிப்து சுமார் 4 மில்லியன் லீட்டர்கள் எரிபொருளை அனுப்பியபோதும், தற்போதைய பிரச்சினையை தீர்க்க அது போதுமானதாக இல்லை. சினாயில் இடம்பெறும் கடும் மோதல் காரணமாக எகிப்தில் இருந்து வரும் மின்சார இணைப்புகள் சேதமாகியுள்ளன.

காசாவுக்கான மின்சார தேவையில் 30 வீதமான 125 மெகாவோட்ஸ் மின்சாரத்தை இஸ்ரேல் விநியோகிக்கின்றபோதும், அப்பாஸ் நிர்வாகம் அதற்கான நிதியை நிறுத்தியதை அடுத்து கடந்த மாதம் இஸ்ரேல் மின்சார விநியோகத்தில் 40 வீதத்தை குறைத்தது.

தனது எதிரி அமைப்பான ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாகவே அப்பாஸ் இந்த நடவடிக்கையை எடுத்ததாக கருதப்படுகிறது.

இந்த மின்சார வெட்டு காசா பகுதியில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என்று பலஸ்தீன ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கான ஐ.நா மனிதாபிமான இணைப்பாளர் ரொபட் பைபர் கடந்த மாதம் எச்சரித்திருந்தார். 

No comments

Powered by Blogger.