அரசியல் பேய்களை, சாடுகிறார் மங்கள
வெள்ளைவான் கடத்தல் கலாச்சாரத்தை நாட்டுக்கு அறிமுகம் செய்தவர்கள் காணாமல் போதல் குறித்த சட்டத்தை தடுக்கின்றார்கள் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பலவந்தமாக காணாமல் போதல்கள் தொடர்பிலான சர்வதேச பிரகடனத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டம் தொடர்பில் அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தமது அறிக்கையில்,
இரட்டை நிலைப்பாடுடைய அரசியல் பேய்கள் இன்று காணாமல் போதல்கள் குறித்த சட்டத்தை எதிர்க்கின்றனர். காணாமல் போதல்களை தடுக்கும் புதிய சட்ட மூலம் விரைவில் நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். இவ்வாறான சட்ட மூலம் நாகரீகமான உலகில் சமூகத்தின் அனைத்து மனிதர்களுக்கும் கிடைக்க வேண்டிய உரிமைகளை வலியுறுத்தி நிற்கின்றது.
இந்த சட்டத்தின் பிரதான அடிப்படை நாட்டில் பிறக்கும் அனைத்து இலங்கையர்களும் பலவந்தமான அடிப்படையில் காணாமல் போவதனை தடுக்க வேண்டியதாகும். காணாமல் போதல்களை தடுக்கும் புதிய சட்டம் கடந்த கால சம்பவங்களை பாதிக்காது, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதனை தடுக்கவே சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.
கடந்த காலங்களில் வெள்ளைவான் கலாச்சாரத்தை அறிமுகம் செய்த தரப்பினர் இந்த உத்தேச சட்டம் தொடர்பில் பொய்யான பீதியை கிளப்பி மக்களை பிழையாக வழிநடத்த முயற்சிக்கின்றனர் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
Post a Comment