முஸ்லிம்களுக்கு ஏன் அநியாயம் செய்கிறீர்கள்..? முல்லைத்தீவில் றிசாத் ஆத்திரம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகளை தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்து கொண்டு இருக்காமல், அவர்களை நிம்மதியாக வாழ்வதற்கு வழிவிடுங்கள். என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களின் ஒருவருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.
முல்லைத்தீவு கச்சேரியில் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனின் வழிநடத்தலில் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களான முதலமைச்சர் விக்னேஸ்வரன், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், காதர் மஸ்தான் எம்பி ஆகியோர் தலைமையில் இன்று (10.07.2017) இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர் இந்த வேண்டுகோளைவிடுத்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொட்டியாகும்பம் பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களுக்கு 7வருடங்களுக்கு முன்னரே காணிகச்சேரி இடம்பெற்ற போதும், இன்னும் அவை அவர்களுக்கு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது. அதே போன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்து, வெளியேறி மீண்டும் இங்கு வந்துள்ள முஸ்லிம் மக்கள் காணிகளின்றி அவதிப்படுகின்றனர். இந்த மக்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக இவ்வாறான ஓர் அநியாயம் ஏன் இழைக்கப்படுகின்றது? இந்த மக்கள் இங்கே குடியேறுவதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா? அல்லது அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களா? இந்தக் கூட்டத்திலே உங்கள் முடிவைச் சொல்லுங்கள்.
முல்லைத்தீவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் 42ஆயிரம் குடும்பங்கள் மீளக் குடியேறியுள்ளன. இன்னும் இரண்டாயிரம் குடும்பங்கள் காணி இல்லாத நிலையில் அவதிப்படுவது உண்மைதான். அதுவும் 5பிரதேச செயலாளர் பிரிவுகளில் இவர்கள் வாழ்கின்றனர். அதிகாரிகள் நினைத்தால் ஒரு வார காலத்தில் காணிக் கச்சேரிகளை வைத்து இவர்களுக்கு காணி வழங்குவது தொடர்பில் மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கமுடியும். தமிழ் மக்களின் 93சதவீதமானவர்களின் காணிப்பிரச்சினை தீர்க்கப்பட்ட நிலையில் சுமார் 7சதவீதமானவர்களின் பிரச்சினைகளை காரணமாக வைத்து, முஸ்லிம்களின் சிறுதொகையினரை குடியேறவிடாமல் இழுத்தடிப்பதில் என்ன சந்தோசம் காண்கின்றீர்கள்? தமிழ் மக்களின் பாதிப்புக்களை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டனர் என்பதை உங்கள் மனச்சாட்சி ஏன் ஏற்க மறுக்கின்றது? என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் இடைமறித்துப் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சச்சிதானந்தன,;
முஸ்லிம்களையும், சிங்கள மக்களையும் குடியேற்றுவதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள விசேட செயலணி தொடர்பில் கேள்வி எழுப்பியதுடன், தமிழ் மக்களுக்கு ஏன் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது? என வினவினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ரிஷாட், வடக்கு முஸ்லிம்கள் குடியேற்றப்படாமல் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டதனாலும் அவர்களுக்கு ஓரவஞ்சனை காட்டப்பட்டதனாலுமே மீள்குடியேற்றச் செயலணி அமைக்கப்பட்டது. இந்தச் செயலணி உருவாக்கப்பட்ட போது, தமிழ் மக்களின் குடியேற்றத்தை தாங்கள் செய்வதாகவும் அவர்களின் அடிப்படை வசதிகளுக்கும் தாங்களே பொறுப்பெனவும் மீள்குடியேற்ற அமைச்சு கூறியது.
அதனால் தான் நீண்டகாலம் அகதிகளாக வாழும் முஸ்லிம், சிங்கள மக்களின் மீள் குடியேற்றத்தை மேற்கொள்வதற்காக நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். எனவே, தமிழ் மக்களை ஒதுக்க வேண்டுமென்று நாங்கள் நினைக்கவில்லை. அது தொடர்பில் உங்கள் அபிலாஷைகளையும் கோரிக்கைகளையும் அரசிடம் தெரிவியுங்கள். என்னைப் பொறுத்தவரையில் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வீட்டுப்பிரச்சினைகளுக்கு நிச்சயமாக உதவுவேன். அது தொடர்பில் புள்ளிவிபரங்களைத் தந்தால் நான் நடவடிக்கை எடுப்பேன் என்று குறிப்பிட்டார்.
இந்தக்கூட்டத்தில் மாகாணசபை உறுப்பினர்களான ரவிகரனுக்கும், ஜனூபருக்குமிடையில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. முதலமைச்சர் விக்னேஸ்வரனை சில உறுப்பினர்கள் பிழையாக வழிநடத்துவதாக அமைச்சர் ரிஷாட் ஒரு கட்ட்த்தில் குறிப்பிட்டார். மாகாண அமைச்சர் டெனீஷ்வரனும் நியாயங்களை எடுத்துக்கூறினார். துமிழ் சிங்கள உறவினை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை வேண்டுமென்றார்.
மகாவலி திட்டத்தினால் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகள், தென்னிலங்கை மீனவர்கள் இந்த மாவட்டத்தில் அத்துமிறி மீன் பிடிப்பதால் சிறு மீன்படி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவது தொடர்பிலும் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கவலைத் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட முஸ்லிம்களினதும், தமிழர்களினதும் காணிப்பிரச்சினைக்கு, காணிக்கச்சேரிகளை ஒரே நாளில் மேற்கொண்டு தீர்வுகள் காண்பதெனவும் ஆலோசிக்கப்பட்டது. அரசாங்க அதிபரும், பிரதேச செயலாளர்களும் ஆவன நடவடிக்கைகளை இந்த விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளுமாறு கோரப்பட்டன.
Post a Comment