யாழ்ப்பாணத்தில் அரசியல்வாதிகளுக்கு மக்களை வழிநடத்த தெரியவில்லை, இராணுவமே அவசியம்
வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் எனது நல்ல நண்பர். அவர் முன்வைக்கும் காரணிகள் அனைத்தும் அரசியல் சார்ந்ததாகும். அவர் அரசியல் மேடைகளில் பொது மக்கள் முன்னிலையில் முன்வைக்கும் காரணிகள் குறித்து நாங்கள் குழப்பமடைந்ததில்லை. இனியும் குழப்பமடையப் போவதுமில்லை என புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் அரசியல்வாதிகளுக்கோ, சிவில் நிருவாகத்தினருக்கோ மக்களை சரியாக வழிநடத்த தெரியவில்லை. இராணுவமே அவசியமாகியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் அது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் எனது நல்ல நண்பர். அவர் ஒரு அரசியல்வாதி, இராணுவத்தை வைத்து அவர் அரசியல் செய்கின்றார், நாம் இராணுவத்தில் உள்ளோம். எனினும் என்னுடைய நல்ல நண்பர் அவர். அவர் முன்வைக்கும் காரணிகள் அனைத்தும் அரசியல் சார்ந்ததாகும். அவர் அரசியல் மேடைகளில் பொதுமக்கள் முன்னிலையில் முன்வைக்கும் காரணிகள் குறித்து நாங்கள் குழப்பமடைந்ததில்லை.
இனியும் குழப்பமடையப் போவதுமில்லை. குழப்பமடைய வேண்டியது அரசியல் வாதிகள் மாத்திரமேயாகும் . நாம் சேவை செய்கின்றோம். அதுபோல் உண்மையான நிலைமைகள் என்னவென்பது எமக்கு தெரியும். ஆகவே விக்னேஸ்வரன் முன்வைக்கும் காரணிகள் தொடர்பில் எவரும் குழப்பமடைய அவசியம் இல்லை.
இராணுவத்தினருக்கும் அரசியலுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் வாதிகளின் காரணிகளுக்கும் நாம் செவி சாய்க்க வேண்டிய அவசியமும் இல்லை. பதில் கூறவேண்டிய கடமையும் இல்லை. மேலும் யாழ்ப்பாணம் தான் பணியாற்ற மிகவும் கடினமான பகுதியாகும். அங்கு சேவை செய்வது என்பது கடினமான காரணியாகும். எனினும் நான் அங்கு பணியாற்றியுள்ளேன்.
மக்களின் மனங்களை நான் ஆராய்ந்துள்ளேன். இராணுவம் எப்போதும் அச்சுறுத்தலான சூழலில் மக்களுடன் செயற்பட வேண்டும். ஆனால் யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் அரசியல் வாதிகளுக்கோ, சிவில் நிருவாகத்தினருக்கோ மக்களை சரியாக வழிநடத்த தெரியவில்லை. அல்லது அவர்களுக்கு அந்த தலைமைத்துவமும் இல்லை. இராணுவமே அவசியமாகியுள்ளது.
எனினும் எதிர்வரும் காலங்களில் சிவில் தலைமைத்துவம் அவசியமாகும். அதை எதிர்காலத்தில் வளர்த்துக்கொள்ள வேண்டும். அரசியல் வாதிகளும் மக்களுக்கான செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
Post a Comment