காணாமல் போனோர் தொடர்பான செயலகம் - கையெழுத்து போட்டார் ஜனாதிபதி
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தேடி அறியும் செயலகம் தொடர்பான சட்டமூலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கையெழுத்திட்டதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சபை இந்த செயலகத்திற்கான தலைவர் மற்றும் 7 பேரை கொண்ட அதிகாரிகள் குழுவின் பெயர்களை ஜனாதிபதியிடம் முன்வைக்க உள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கொழும்பில் வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கருணாநாயக்க இதனை கூறியுள்ளார்.
நாட்டிற்குள் இருப்பவர்கள் நாங்கள் நாட்டை விற்பனை செய்ய போவதாக கூறுகின்றனர்.
நாங்கள் எதனையும் செய்யவில்லை நாட்டுக்கு வெளியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் நாங்கள் செய்தவை குறித்து எவரும் எதனையும் குறிப்பிடுவதில்லை.
நாங்கள் வெளிப்படையான நியாயத்தை ஸ்தாபித்தமை, நல்லிணக்க செயற்பாடுகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான செயலகம் தொடர்பான சட்டமூலத்தை நிறைவேற்றியது போன்ற பலவற்றை செய்துள்ளோம்.
இந்த செயலகம் கடந்த 1971 ஆம் ஆண்டு புரட்சி காலத்தில் காணாமல் போனவர்கள் குறித்து தேடி அறியும்.
இதில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம் என வேறுபாடுகள் கிடையாது. இந்த செயலகத்தின் மூலம் குறிப்பிட்ட காலம் பற்றி மட்டுமே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட மாட்டாது. தென் பகுதியில் நடந்த கிளர்ச்சிகள் குறித்தும் தேடிப் பார்க்கப்படும்.
சட்டமூலத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் இந்த திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்த சட்டத்தை அமுல்படுத்த ஜனாதிபதி அதில் கையெழுத்திட்டுள்ளார்.
இது சுயாதீனமான செயலகம். அந்த காலத்தில் தவறு செய்தவர்கள் தற்போது பொய்யாக கோஷமிடுகின்றனர். இனவாத கருத்துக்களை வெளியிடுகின்றனர். எனினும் உண்மை என்ன என்பதை கண்டறிய வேண்டும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment