சரித்திரம் பூராவும் பிக்குகள், அநாகரிகமாக தலையிட்டுள்ளார்கள் - புஞ்ஞாசார தேரர்
-DC-
நாட்டிலுள்ள சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வு காண அன்றும், இன்றும் தடையாக இருப்பவர்கள் இந்நாட்டின் பிக்குகளேயாவர் என சத்கோரள மகாதிசாவே பிரதி பிரதம சங்கநாயக்க சாஸ்திரபதி மாகல்கடவல புஞ்ஞாசார தேரர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் சிறுபான்மையினரின் பிரச்சினைகளைத் தீர்க்க 1956, 1957 ஆம் ஆண்டுகளில் பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம் கொண்டு வரப்பட்ட போது அதனைக் கிழித்தெரிவதற்கு காரணமாக இருந்தவர்கள் பிக்குகளே யாவர்.
அக்காலத்தில், பண்டாரநாயக்கவை ஆட்சிக்குக் கொண்டு வந்த பிக்குகளே இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அன்று பிக்குகள் ரொஸ்மிட்டை சுற்றிவளைத்து ஒப்பந்தத்தை கிழித்தார்கள். அன்று பிரதமர் பண்டாரநாயக்க ஒப்பந்தத்தை கொண்டு வந்து என்ன கூறினார் தெரியுமா? இதை நான் இன்று கிழிக்கின்றேன். ஆனால் எதிர்காலத்தில் யுத்தமொன்று கூட உருவாகலாம் என்றும் கூறினார்.
டட்லி சேனநாயக்க பிரதமராக இருந்த போது 1965, 1966 காலப் பகுதியில் செல்வநாயகத்துடன் ஒப்பந்தமொன்று செய்தார். இதனையும் கிழித்தெரியக் காரணமாக பிக்குகளே இருந்தனர்.
சரித்திரம் பூராவும் பிக்குகள் அநாகரிகமான முறையில் இதில் தலையிட்டுள்ளார்கள். ஜே. ஆர். ஜயவர்தன காலத்தில் அபிவிருத்தி சபை, கிராம சபை என்பவற்றைக் கொண்டு வந்தார். அதுவும் செயல்படவில்லை. அதனால் தான் முப்பது வருடகால யுத்தம் ஏற்பட்டது. நாம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாலும் காயம் இன்னும் உள்ளது. அதனை சுகமாக்க வேண்டிய பொறுப்பு நல்லாட்சி அரசாங்கத்தினுடையது.
இந்த நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு வரைவொன்றை தயாரித்து வருகின்றது. அதற்கு மூன்று நிக்காயக்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது எமது வரலாற்றை மீண்டும் ஞாபகமூட்டுகின்றது.
இன்றும் பிக்குகள் அதே இடத்தில் தான் இருக்கின்றார்கள். அதுதான் தவறான நிலைமையாகும். எமது நாட்டின் பொறுப்பான மதத் தலைவர்கள் பிரச்சினைகள் குறித்து சமாதானமான முறையில் நோக்க வேண்டும் எனவும் தேசிய நாளிதழொன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியொன்றில் கூறியுள்ளார்.
Post a Comment