ரணிலின் அரசியல் வாழ்க்கையும், இம்தியாஸும்..!!
-விடிவெள்ளி-
பிரதமர் ரணிலின் 40 வருட அரசியல் வாழ்க்கை தொடர்பில் இம்தியாஸ் பாக்கிர் மாக்காருடன் நேர்காணல்
பிரதமருடனான முதலாவது சந்திப்பு எப்போது நிகழ்ந்தது-?
1973 ஆம் ஆண்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் பழைய தலைமையகமான ஸ்ரீகொத்தா மண்டபத்தில் வைத்தே எமது தொடர்பு ஆரம்பமானது. அப்போது நான் பல்கலைக்கழக மாணவனாக இருந்தேன். அத்துடன் ஐ.தே.க.மாணவர் முன்னணியின் மத்திய செயற்பாட்டு சபை உறுப்பினராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தேன். தற்போது தேசிய சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீனால் டி மெல் என்பவரே ரணில் விக்கிரமசிங்கவை எனக்கு முதன்முதலாக அறிமுகம் செய்து வைத்தார்.
பழைய ஸ்ரீகொத்தா மண்டபத்தில் பலகையால் அமைக்கப்பட்ட மாடிப்படிகள் மீது நான் ஸ்ரீனால் டி மெல்லுடன் ஏறிக் கொண்டிருந்தேன். அப்போது அதே படிகளில் வந்து கொண்டிருந்த ஓர் இளைஞரைச் சுட்டிக்காட்டி “வருகிறவரைத் தெரியுமா?” என்று ஸ்ரீனால் என்னிடம் வினவினார். “தெரியவில்லையே” என்று நான் பகர்ந்தேன். “இவர்தான் ரணில் விக்கிரமசிங்க எஸ்மண்ட் விக்கிரமசிங்கவின் புதல்வர்” என்று ஸ்ரீனால் எனக்கு ரணிலை அறிமுகம் செய்து வைத்தார். உடனே நான் அவருக்கு கைலாகு கொடுத்து “மிஸ்டர் ரணில் விக்கிரமசிங்க அவர்களே” என்று கௌரவமாக விளித்தேன். எனது பெயரையும் தெரிந்து கொண்ட அவர், இம்தியாஸ் என்னை “விக்கிரமசிங்க அவர்கள்” என்று அழைக்கத் தேவையில்லை. வெறுமனே “விக்ரமசிங்க என்று மாத்திரம் சொன்னால் போதும்” என்று மிகவும் எளிமையாக பகிர்ந்தார். இதுவே எங்கள் இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பும் முதல் உரையாடலுமாகும்.
ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற பிரவேசத்தின் ஆரம்பம் எப்போது நிகழ்ந்தது?
ரணில் விக்ரமசிங்க 1977 ஆம் ஆண்டு முதன்முதலாக பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் வெளிநாட்டு விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராகவும் நியமனம் பெற்றார். அப்போது வெளிநாட்டு அமைச்சராக ஏ.ஸீ.எஸ்.ஹமீத் பதவியிலிருந்தார். வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் சர்வதேச நாடுகளுடன் நெருங்கிய உறவுகளை வைத்துக் கொண்டு நாட்டை உயர்நிலைக்குக் கொண்டு வரும் பாரிய பொறுப்பை ஜனாதிபதி ஜே.ஆர். அமைச்சர் ஹமீத் மீது சுமத்தியிருந்தார். இதனால் ஏ.ஸீ.எஸ்.ஹமீத் பெரும்பாலான காலத்தை வெளிநாட்டு விஜயங்களிலே கழித்து வந்தார். இதனால் மேற்படி அமைச்சின் பிரதியமைச்சராகவிருந்த ரணில் விக்கிரமசிங்க அடிக்கடி பதில் அமைச்சுப் பொறுப்பையேற்று கடமையாற்றும் வாய்ப்பைப் பெற்றார். இதனால் இளம்வாலிபப் பருவத்திலேயே பொறுப்பு வாய்ந்த பதவியைக் கையாளும் மிகவும் பாரியதொரு அனுபவம் இவருக்குக் கிடைத்தது.
ஜனாதிபதி பிரேமதாஸ கொலை செய்யப்பட்டதன் பின்னர் உருவான அராஜக சூழ்நிலை சமாளிக்கப்பட்டதில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பங்குண்டா?
1993 ஆம் ஆண்டு மேதினத்தன்று ஜனாதிபதி பிரேமதாஸ கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த இடத்திலிருந்து லங்காதீப நிறுவன வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த ரணில் அதில் என்னையும் ஏற்றிக்கொண்டு வந்தார். அவர் பாதுகாப்பு அமைச்சுக்குப் போவதாகவும் என்னை மேதினக் கூட்டம் இடம் பெறும் இடத்திற்குச் சென்று அங்குள்ள எரானந்தவிடம் வைபவத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டாம் என்று கூறும் படியும் என்னைப் பணித்தார். நானும் அவ்வாறு செய்தேன். பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்ட ரணில், அங்கு பிரதமர், பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், சபாநாயகர் ஆகியோரை உடனடியாக வரவழைத்து, பதில் ஜனாதிபதியாக பிரதமரை சத்தியப்பிரமாணம் செய்ய வைத்து நாட்டு நிர்வாகம் தொடர வழி சமைத்தார்.
நீங்கள் ரணில் விக்ரமசிங்கவை விமர்சித்த சந்தர்ப்பங்கள் குறித்து….. ?
ரணில் விக்ரமசிங்கவை நான் கட்சிக்குள்ளே ஒரு சில விடயங்கள் குறித்து விமர்சித்ததுண்டு. அரசியல் செயற்பாடுகளின் போதும் எங்களுக்குள் கருத்து வேற்றுமைகள் நிலவிய சந்தர்ப்பங்களும் இருந்துள்ளன. இவை யாவும் தனிப்பட்ட ரீதியில் எழுந்த பிரச்சினைகள் அல்ல. கட்சியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்லவும் கட்சியின் பலத்திற்கு உரம் சேர்க்கவுமே விமர்சனங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டனவேயன்றி கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கத்திற்கல்ல. கட்சியிலிருந்து நாம் தூரமாகாதிருந்ததொன்றே இதற்குச் சான்றாகும். கட்சியின் அடிப்படைக் குறிக்கோளில் எங்களுக்கிடையே கருத்து வேற்றுமை கிடையாது.
Post a Comment