கிறீஸ் மனிதன் அட்டகாசம், பிடிப்பதற்காக விரட்டியவர் பலி
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் வடக்கு, கிழக்கில் தலைவிரித்தாடிய கிறீஸ் மனிதன் அட்டகாசம் இப்போது தெற்கில் ஆரம்பமாகியுள்ளது.
களுத்துறை, மாத்தறை, ஹங்வெல்ல மற்றும் வெல்லவாய போன்ற இடங்களில் இரவுநேரங்களில் கறுப்பு உடை அணிந்துகொண்டு பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளுக்குச் சென்று அவர்களைப் பயமுறுத்துவது, அவர்களின் உடைகளை எடுத்துக்கொண்டு போவது, வீடுகளுக்குக் கல்லெறிவது எனத் தினமும் இந்த அட்டகாசம் இடம்பெறுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
பொலிஸார் இவர்களைத் தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். தெற்கில் ஒரு வாரமாகப் பரவலாக இடம்பெற்றுவரும் கிறீஸ் மனிதர்களின் அட்டகாசத்தில் உயிரிழப்பொன்றும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹங்வெல்ல பகுதியில் அட்டகாசம் புரிந்து வந்த கிறீஸ் மனிதனைப் பிடிப்பதற்காக விரட்டிய இளைஞரொருவர் இருட்டில் தடுமாறி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேபோல் மாத்தறை அக்குரஸ்ஸ பகுதியிலும் இந்த கிறீஸ் மனிதர்கள் கைவரிசை காட்டத் தொடங்கியுள்ளனர்.
இரவுநேரங்களில் முகத்தை மறைத்துக்கொண்டு வீட்டில் தனியாக இருக்கும் பெண்களையும் வீதிகளில் செல்லும் பெண்களையும் பயமுறுத்தி வருகின்றனர் என சிங்கள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, கடந்த திங்கட்கிழமை வெல்லவாய நகரில் ஒருவர் மக்களால் பிடிக்கப்பட்டு மரத்தில் கட்டப்பட்டார். பெண்கள் இருக்கும் வீடுகளில் நிர்வாணமாகத் தோன்றிவிட்டு ஓடிவிடுவதை இவர் வழக்கமாகச் செய்துவந்துள்ளார் அந்த பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.
அத்துடன், பலநாள் காத்துக்கிடந்து அவரை மக்கள் பிடித்து மரத்தில் கட்டி பொலிஸில் ஒப்படைத்தனர். தான் ஒரு மனநோயாளி எனவும், அதற்காக தான் சிகிச்சைபெற்று வருவதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், கிறீஸ் மனிதர்களின் கல்வீச்சில் களுத்துறையில் பலர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு கிறீஸ் மனிதர்கள், மர்மநபர்கள் என்று வெவ்வேறு பெயர்களில் பெண்களை மாத்திரம் குறிவைத்து தெற்கில் பல இடங்களில் இந்த அட்டகாசம் இடம்பெற்று வருவதாகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
Post a Comment