'தமிழ் பொலிஸார், தமிழ் இளைஞன் மீது சுட்டதை சகிக்கமுடியாது'
யாழ்.வடமராட்சி கிழக்கில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிக மோசமான சம்பவம் என கூறியிருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன், தமிழ் பொலிஸார் ஒருவர் சக தமிழ் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தி படுகொலை செய்வது சகிக்க இயலாத ஒரு செயலாகும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் வடமராட்சி கிழக்கில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற் கண்டவாறு கூறியிருக்கின்றார்.
இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,
மேற்படி சம்பவத்தில் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியமை மிக பிழையான ஒரு நடவடிக்கையாகும். பிழையே செய்திருந்தாலும் அவர்களை தடுப்பதற்கு பல வழிகள் இருக்கின்றது.
குறிப்பாக வாகனத்தின் சில்லுக்கு சுட்டிருக்கலாம். அதேபோல் அடுத்த பக்கத்தில் கடமையிலிருக்கும் பொலிஸாருக்கு கூறி தடுத்திருக்கலாம் இப்படி பல வழிகள் இருக்கின்றன.
ஆனால் அவற்றை கருத்தில் கொள்ளாமல் துப்பாக்கிச் சூடு நடத்தி இளைஞர் ஒருவரை கொலை செய்திருக்கின்றமை மிக தவறானது. அது மட்டுமல்லாமல் துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸார் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கின்றார்.
அதேபோல் துப்பாக்கி சூடு நடத்தவும் ஒருவரை கொல்லவும் முக்கியமான காரணங்கள் இருக்கவேண்டும். குறிப்பாக சுயபாதுகாப்புக்கு பாதகம் உண்டாக்கப்படும்போது இவ்வாறான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் நடப்பதுண்டு ஆனால் இங்கே அவ்வாறான ஒரு நிலை இல்லாமல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதனை விட தமிழ் பொலிஸார் ஒருவர் சக தமிழ் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தமையானது சகிக்க இயலாத ஒரு செயலாகவே அமைந்திருக்கின்றது. இந்தவகையில் துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸார் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment