எமது அழுத்தம், முஸ்லிம்கள் மீதான தாக்குதலை குறைத்தது - அமில தேரர்
சிங்களத்தில் : பிரஸன்ன சஞ்சீவ தென்ன கோன்
தமிழில் : ஏ.எல்.எம்.சத்தார்
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக தொல் பொருள்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் சமூக நீதிக்கான பல்கலைக்கழக பேராசிரியர்களின் சம்மேளன ஏற்பாட்டாளருமான தம்பர அமில தேரருடன் லங்காதீப வார இதழ் மேற்கொண்ட நேர்காணலின் தமிழ் வடிவம்.
கேள்வி: முஸ்லிம்களுக்கு விரோதமான நாசகார வேலைகளுக்கு ஜனவரி எட்டுக்கு முன்னர் அன்றைய அரசின் ஆதரவு இருந்ததாக நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள். இன்று முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் அடாவடித்தனங்களுக்கும் இன்றைய அரசு உடந்தையாக இருப்பதாக நினைக்கிறீர்களா?
பதில்: ஆம், இருக்கிறது. அதனால்தானே ஜனவரி 8க்கு போகும்படி நினைவூட்டுகிறோம். ஜனவரி 8 நிலைப்பாடு நன்றாகத்தானே இருந்தது. அது இனவாதத்திற்கு எதிரான நிலைப்பாடாகத்தானே இருந்தது. ஆனால் இனவாதம் மீண்டும் தலைதூக்குவதாகவே உள்ளது. சம்பந்தப்பட்டவரை கைது செய்யும்படி கூறினால் அவ்வாறு கைது செய்யாது இருக்கையில் அது மேலும் வளரவே செய்யும். அரசு என்ற வகையில் இதனைத் தடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே தான் நாம் இருக்கிறோம். ஜனவரி 8 இல் இனவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைத்தே இந்த அரசு பதவிக்கு வந்தது. இந்த நிலைப்பாட்டில் இருந்தால்தான் இந்த அரசால் தொடர்ந்து நிலைத்திருக்க முடியும். இன ஐக்கியம் என்பது தொடரப்பட வேண்டியதொன்றாகும். இந்த நிலைப்பாட்டிலிருந்து தடம்புரண்டால் அது ஜனவரி 8 இல் இருந்து கரணம் போட்ட மாதிரியாகவே அமையும்.
கேள்வி: இப்போது உங்களுக்கு அரசினால் கிடைக்கப் பெற்றுள்ள பிரதிபலன்கள் என்ன?
பதில்: ஊடகவியலாளர்களைக் கூட்டி இத்தவறுகள் குறித்து நாம் கருத்து வெளியிட்டால் அதன் பின் அரசு கொஞ்சம் அசைந்து கொடுக்கும். இதுதான் தற்போதுள்ள நிலை.
கேள்வி: அது எப்படி நடந்தேற்றப்படுகிறது?
பதில்: தொடர்ந்து கைதுகள் இடம்பெற்று வருகின்றன. முஸ்லிம் பள்ளித் தாக்குதல்களும் குறைந்து விட்டன. மக்கள் மத்தியில் எமது கருத்துக்களும் ஏற்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஜனாதிபதியும் பிரதமரும் தத்தம் நிலைப்பாடுகளை வெளியிட்டு வருகிறார்கள். இவற்றின் மூலம் பாரியதொரு மாற்றம் நிகழ்ந்துள்ளதாக உணர முடிகிறது.
கேள்வி: ஞானசார தேரர் கைது செய்யப்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்: ஞானசார என்ற தனி நபர் குறித்தல்ல. நான் பிரஸ்தாபிப்பது. இதனை தனி நபர் ஒருவராக வரையறுத்துக் கொள்ள வேண்டாம். ஞானசாரயானாலும் சரி, கர்தினால் ஒருவரானாலும் சரி, அல்லது லெப்பை ஒருவரானாலும் சரி, கோயில் பூசாரியாக இருந்தாலும் சரி, பிரதமர் அல்லது அமைச்சர், ஊடகவியலாளர், பெண்ணொருவர் அல்லது ஓர் ஆணாக இருந்தாலும் சரி, வேறு எவராக இருந்தாலும் சரி இத்தகைய சந்தர்ப்பங்களில் அவ்வாறு தனிப்பட்ட ரீதியில் நோக்கக் கூடாது. நடு நிலையில் நின்றே நபர் ஒருவரை நோக்க வேண்டும்.
கேள்வி: நான் கேட்ட வினா…..?
பதில்: ஆம் நாட்டில் கொந்தளிப்பு நிலை உருவாகும் பட்சத்தில்…. விசேடமாக இனம், மதத்தை மையமாக வைத்து யாராகிலும் நாட்டைப் பற்றி எரியச் செய்ய எத்தனிக்கும் பட்சத்தில் அவரை சட்டத்தின் பிடியில் சிக்கச் செய்ய வேண்டும். அதாவது அந் நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜராக்கி சட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
கேள்வி: ஞானசார தேரருக்கு அமுல்படுத்தப்பட வேண்டும் என்று தாங்கள் முன்வைக்கும் சட்டம் முஸ்லிம் அல்லது தமிழ் இனங்களைச் சேர்ந்த இனவாதம் பேசுவோர் மீதும் அமுல்படுத்தப்படுவதில்லையே.
பதில்: அப்படி இல்லை. அண்மைக்கால வரலாற்றில் முஸ்லிம்களோ அல்லது தமிழர்களோ பௌத்த விகாரைகளைத் தாக்கிய சம்பவம் எதனையும் நாம் கண்டதில்லை. அல்லது பௌத்த வணக்கத் தலங்களைத் தாக்குங்கள் என்று கோஷங்கள் எழுப்படுவதையும் எம்மால் கேட்க முடியவில்லை. ஊடகவியலாளர் சந்திப்புக்களின் போதும் எடுத்துக் காட்டியுள்ளோம். தமிழ்ப் பெயரில் உள்ள அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகிறோம். அதாவது அமைப்புக்கள் எனும்போது இனம், மதத்தின் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் அமைப்புக்களைத் தான் இவ்வாறு தடை செய்யக்கோரி வருகிறோம். அரசியல் யாப்பு மூலம் இவற்றுக்குத் தடை கொண்டு வரப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
கேள்வி: அப்படியாயின், ஜாதிக ஹெல உறுமய, முஸ்லிம் காங்கிரஸ்………. என்றுள்ள அரசியல் கட்சிகள் தானே?
பதில்: கண்டிப்பாக ஜாதிக ஹெல உறுமய, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும். தனி நபரன்றி பொதுவென்பதன் அர்த்தம் இதுவாகும். தனி நபர்களான விக்னேஸ்வரன், ஹக்கீம், அதாவுல்லாஹ், சம்பிக்க என்பதல்ல முக்கியம். இனவாதிகள், மதவாதிகள் போன்றோருக்கு எதிராக கட்டப்படும் வேலியாக இதனைப் பார்க்க வேண்டும். அதுவும் நடு நிலையிலிருந்தே நோக்க வேண்டியதும் அவசியம்.
Post a Comment