Header Ads



"ஞானசாரர் விடயத்தில், முஸ்லிம்களுக்கு ஒரு செய்தி உள்ளது"

பொது பல சேனாவை பாராளுமன்றம் அழைத்து வந்து அவர்களின்  கோரிக்கைகளை செவிமடுத்த தற்போதைய ஆட்சியாளர்கள், அஸ்கிரிய பீடத்தின் கோரிக்கையை கலந்துரையாடுவோம் என்றாவது கூறாது, தாங்கள் அதனை கவனத்தில் கொள்ள மாட்டோம் என கூறி இலங்கை நாட்டு பௌத்த மக்கள் அனைவரையும் இழிவுக்கு உட்படுத்தியுள்ளதோடு இவ்வாட்சியாளர்கள் இலங்கை முஸ்லிம்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தியுள்ளதையும் அறிந்துகொள்ளச் செய்வதாக  பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்சன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 குருநாகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு  உரையாற்றியவரே  மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது..

இலங்கையில் உள்ள முக்கியமான அனைத்து மஹாநாயக தேரர்களும் அஸ்கிரிய பீடத்தில் ஒன்று கூடி தற்போதுகொண்டுவர முயற்சிக்கப்படும் அரசியலமைப்பு தேவையற்றது என முடிவெடுத்துள்ளனர். 

இவர்களின் இக் கருத்து தற்போதைய அரசை இவ்விடயத்தில்  பாரிய சவாலுக்குட்படுத்தும் என அனைவரும் கருதிஇருந்த வேளையில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜிதசேனாரத்தன, மஹாநாயக்க தேரர்களின்  முடிவுகளை தாங்கள் கவனத்தில் கொள்ளப்போவதில்லை என்ற ரீதியில் கூறியுள்ளார்.

இலங்கை முஸ்லிம்களுக்கும் ஞானசார தேரருக்குமிடையில் பாரிய பனிப்போர்  ஒன்றே இடம்பெற்றுவருகிறது. இந்த நிலையில் ஞானசார தேரரின் கூற்றுக்களையும் செயற்பாடுகளையும் யாருமே அங்கீகரித்ததாக இல்லை. இருப்பினும் தற்போதைய அரசு அவர்களை பாராளுமன்றம் அழைத்து வந்து அவர்கள் கோரிக்கைகள்தொடர்பில் ஆராய்ந்திருந்தது.இவரை கைது செய்வதில், இவர் ஒரு மதகுருவாவதால் இவரை மிகக் கவனமாகவேகையாள வேண்டும் என்ற நியாயங்கள் கற்பிக்கப்பட்டிருந்தன. இறுதியில் அவருக்கு உச்ச மரியாதையும்சலுகைகளும் வழங்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் மத குரு என்ற போர்வையை அவர் போர்த்தியிருந்ததால் கிடைத்தவையாகவே மக்களுக்கு காட்டப்பட்டிருந்தது.

அமைச்சர் ராஜித இலங்கை பௌத்த மக்களின் பெரும் மதிப்பிற்குரிய அஸ்கிரிய பீடங்களின் முடிவு தொடர்பில் அவர்களுக்கு தெளிவுபடுத்துவோம் என்று கூட கூறாது அதனை நாங்கள் கணக்கெடுக்கப்போவதில்லை என கூறி இருப்பதானது பாரிய சந்தேகங்களை கிளறி விடுவதோடு இலங்கையில் முழு பௌத்த மக்களையும் அவமதிக்கும்செயற்பாடாகும். 

இப்படி ஒட்டு மொத்த இலங்கை மக்களின் ஆதரவைப் பெற்ற இப் பீடங்களின் கருத்துக்களை புறந்தள்ளுபவர்களுக்கு ஞானசார தேரரை தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல. இவ்வரசு பௌத்த மத குருக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தமைக்கு பல ஆதாரங்களும் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வரசுக்கு ஞானசார தேரர் சம்பந்தமான விடயங்கள் என்றால் தான் பௌத்த மத குரு என்றசிந்தனை கிளம்பி அனைத்தையும் தடை செய்யும்.

இங்கு இவ்வாட்சியை கொண்டு வருவதில் பெரும் பங்களிப்பை வழங்கிய இலங்கை முஸ்லிம்களுக்கும் ஒருசெய்தி உள்ளது. ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதை விடுத்து இவ்வரசுக்கு எதிராகசெயற்பட்டால் அவர் மீது இவ்வரசின் சட்டம் பாயும் என்பதுவே அதுவாகும். பௌத்த மதகுருக்களின் விடயங்களை இவ்வாட்சியாளர்கள் கவனமாக கையாளுவதானால் அஸ்கிரிய பீடத்தின் இம் முடிவுக்கு அதிக மரியாதைவழங்கியிருப்பார்கள்.இவைகளிலிருந்து இவ்வரசின் உண்மையாக முகம் படிப்படியாக வெளிப்படுகிறது.

அரசியல் அமைப்பில் கைவைப்பதை எதிர்க்கும் மாஹாபீடங்களை தைரியமாக எதிர்க்க தயாராகிவிட்டநல்லாட்சி பொதுபல சேனாவை எதிர்க்காமல் நிதானபோக்கில் சென்றமையின் பின்னணியை நாம் புரிந்து கொள்ளவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.