அரச மருத்துவர்களை, பயங்கரவாதிகளுடன் ஒப்பிடும் விக்ரமபாகு
உலகில் பயங்கரவாதம் இருக்குமாயின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் செயற்படுத்தப்படும் நோயாளிகளை கொல்லும் பயங்கரவாதமே மிகவும் கொடூரமான பயங்கரவாதம் என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
எந்த வகையிலும் அரசியலுடன் சம்பந்தப்படாத நோயாளிகளை நாடு முழுவதும் கொன்று சித்திரவதை செய்து முன்னெடுக்கப்படும் பயங்கரவாதம் உலகில் உருவான மிகவும் ஆபத்தான பயங்கரவாதம் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் என்ன பயங்கரவாதி. அவர் பயங்கரவாதி அல்ல. இதுதான் பயங்கரவாதம்.
தமது பயங்கரவாதத்தின் மூலம் நாட்டில் உள்ள அனைத்தையும் செய்ய முடியும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர்கள் எண்ணிக் கொண்டுள்ளனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பயங்கரவாதத்திற்கு அடிபணிந்து அரசாங்கம் சைட்டம் நிறுவனத்தை அழிக்க போகிறதா என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகிறோம்.
மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டை நிர்வாகம் செய்ய அரசாங்கம் இடமளிக்க போகிறதா எனவும் கடுமையான வினவுகிறோம்.
மருத்துவர்களின் பயங்கரவாதத்தில் நோயாளிகள் கொல்லப்பட்டு, அவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக இடமளித்து விட்டு சமூகத்தை முன்னோக்கி இட்டுச் செல்வதா?. இவ்வாறு செய்வதென்றால் அரசாங்கம் ஒன்று தேவையில்லை. இப்படியான அரசாங்கத்திற்காக நாங்கள் போராடவில்லை.
நல்ல முறையில் முடியாது போனால் கெட்ட முறையிலாவது நீதியையும் நியாயத்தையும் அரசாங்கம் வழங்க வேண்டும். நல்ல முறையில் நியாயம் கிடைக்காது. நல்லது செய்து, புண்ணியம் செய்து எப்போதும் நியாயத்தை பெற முடியாது. இதனால், பாவமும் செய்ய வேண்டும் என விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment