ஷரீஆ சட்டம், வங்கிமுறை. காதி நீதிமன்றை இல்லாதொழிக்க வேண்டும்
-ARA.Fareel-
அவசர, அவசரமாக எமது நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவையில்லை. நாட்டின் நல்லிணக்கத்தையும் தேசிய ஒருமைப்பாட்டினையும் ஏற்படுத்துவதற்கு புதிய அரசியல் அமைப்பு அவசியம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அப்படியாயின் எமது நாட்டிலிருந்து ஷரீஆ சட்டம், ஷரீஆ வங்கிமுறை, காதி நீதிமன்ற முறைமை, தேச வழமைச் சட்டம் என்பவற்றை இல்லாதொழித்து அனைவருக்கும் ஒரே சட்டம் அமுல் நடத்தப்படவேண்டும் என சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.
ராஜகிரியவிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது
‘இன்று நாட்டில் இனரீதியான சட்டங்கள் அமுலில் உள்ளன. இவை நீக்கப்படவேண்டும். ஒருவர் ஒரு விவாகம் மாத்திரம் செய்து கொள்வதற்கு பொதுவான சட்டம் கொண்டுவரப்படவேண்டும். அரசாங்கம் தயாரிக்கும் புதிய அரசியல் யாப்பில் இன, மத ரீதியான சட்டங்கள் நீக்கப்படும் என உறுதியளிக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரமும் குறைக்கப்படக்கூடாது. அவசர காலநிலைமையில் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பாவிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். கொழும்பை ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுப்பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே எமது நாட்டுக்கு ஐ.எஸ்.அச்சுறுத்தல் இல்லை என்று கூற முடியாது.
புதிய அரசியலமைப்பு பற்றி நாம் பேசும் போது பிறக்காத குழந்தைக்கு நாம் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் வழங்குவதாக கூறுகிறார்கள். ஆனால் அரசியலமைப்பு எனும் குழந்தை 10 மாதங்கள் வயிற்றிலிருந்து பிறந்து விட்டது. தற்போது பிள்ளை நடப்பதற்கு உதவிவருகிறார்கள். புதிய அரசியலமைப்புக்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு சிங்களவர்களுக்கும் பௌத்த மதத்துக்கும் அபாயமானதாக உள்ளதால் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளையும் பெற்றே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என ஜனாதிபதி கூறினாலும் அரசாங்கத்திலுள்ளவர்கள் மாறான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகள் தேவையில்லை. மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள் என்கிறார்கள்.
மகாநாயக்க தேரர்களின் நிலைப்பாட்டினை எவருக்கும் சவாலுக்குட்படுத்த முடியாது. நாட்டின் பெரும்பான்மை மக்கள் மகாநாயக்க தேரர்களின் கருத்தையே ஆதரிக்கிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பு விவகாரம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடவேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசலாம். ஆனால் தேச வழமை சட்டத்தை இல்லாமற் செய்வதற்கு அவர்கள் உடன்படவேண்டும்.
மகாநாயக்க தேரரின் கருத்துக்களை நிராகரிக்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள், புரவெசிபலய, தம்பரஅமில தேரர் என்போரை சிங்கள மக்கள் நிராகரிக்க வேண்டும்.
மகாநாயக்க தேரர்களின் கருத்துகளை நிராகரிக்கும் தம்பர அமில தேரர் போன்றவர்களை நிக்காயாவிலிருந்து நீக்கி விடும்படி மகாநாயக்க தேரர்களைக் கோருகிறோம். அஸ்கிரிய பீடமும், நிர்வாகமும் ஜனாதிபதியிடம் அறிக்கையொன்றினைச் சமர்ப்பித்துள்ளது. சில தீர்மானங்களை எடுத்து அவற்றை நிறைவேற்றும்படி கூறியுள்ளது.
எனவே புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஜனாதிபதி மீள் பரிசீலனை செய்ய வேண்டும். பௌத்த பீடங்களை எதிர்த்து அரசாங்கத்தினால் எந்த தீர்மானங்களையும் நிறைவேற்ற முடியாது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம் என்றார்.
Post a Comment