Header Ads



மாம்பழமாம்.. மாம்பழம்..!!

சுவைக்கும், சேலத்துக்கும்  பெயர் பெற்ற மாம்பழம், இன்று ‘கார்பைடு கல்லால் பழுக்க வைக்கப்படும் பழம்’ என்று பேர் போன நிலைக்கு ஆளாகிவிட்டது. ரசாயனங்களால் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றைக் கண்டுபிடிக்கும் வழிமுறைகள் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் சித்ரா மகேஷிடம் பேசினோம்...

‘‘பொதுவாக தமிழ்நாட்டில் ஜூன் மாதம் நடுவில்தான் மாம்பழ சீஸன் ஆரம்பிக்கும். அப்போதுதான் மரத்திலேயே மாங்காய் பழுக்க ஆரம்பிக்கும். இப்படி இயற்கையாக பழுக்கும்போது எத்தலீன் என்ற வாயு அதிலிருந்து வெளிப்படும். இவ்வாறு பழுக்க வைப்பதுதான் சரியான முறை. ஆனால், ஜூன் மாதம் வரை மாம்பழத்தை பறிக்காமல் விட்டால், கீழே விழுந்து அடிபட்டு வீணாகும். அது மட்டுமில்லாமல் விற்பதற்காக, மார்க்கெட்டுக்கு லாரி
களில் கொண்டுபோகும்போதும் நசுங்கி அடிபடும். இதனால், விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் நிறைய நஷ்டம் ஏற்படும்.

இந்த நஷ்டத்தை சரி செய்வதற்காக விவசாயிகளும், வியாபாரிகளும் மரத்திலேயே மாங்காயைப் பழுக்கவிடாமல், அவசரப்பட்டு பறிக்கிறார்கள். அது மட்டுமில்லாமல், அவற்றை சீக்கிரம் பழுக்க வைக்க வேண்டும் என்பதற்காக மாங்காய் குவியலுக்கு நடுவே, கால்சியம் கார்பைடு கற்களை துணியில் பொட்டலமாக கட்டிப் போட்டு வைக்கிறார்கள். இந்த கற்களில் Arsenic phosphorus hydride என்ற நச்சுத்தன்மை கொண்ட வாயு சிறிதளவு உள்ளது. 
மாம்பழத்தில் உள்ள நீர்ச்சத்து ஆவியாக மாற இந்த வாயு உருவாகிறது. இவ்வாறு செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிடுவதால் கண், மூக்கு, தொண்டை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் எரிச்சல் உண்டாகும். நரம்பு மண்டலம் பாதிப்பு அடையும். தலைவலி, மயக்கம் வரலாம். தூக்கமின்மை ஏற்படும். 

வாந்தி காரணமாக சோர்வாக காணப்படுவார்கள்.இத்தகைய பாதிப்புகள் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படுகின்றன என்பது நிறைய பேருக்கு தெரிவது இல்லை. எனவே, மேலும்மேலும் அளவுக்கு அதிகமாக இந்தப் பழங்களை சாப்பிட்டு வருவார்கள். இதனால் காக்காய் வலிப்பு வரும். அது மட்டுமில்லாமல் இவ்வகை பழங்களைத் தொடர்ந்து சாப்பிடுவதால், சர்க்கரை நோய், பார்க்கின்ஸன் நோயும் வரலாம். 
மேலும், ஏப்ரல் மாதம் தொடங்கும் மாம்பழ சீஸன் முடியும் வரை பெரும்பாலானோர் மாம்பழம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு நீரிழிவு வரலாம்’’ என்பவரிடம் செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களைக் கண்டுபிடிப்பது எப்படி என்று கேட்டோம்...

‘‘இயற்கைக்கு மாறாக கால்சியம் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை எளிதாக கண்டுபிடிக்கலாம். அவற்றில் இயல்பான மாம்பழ வாசனை இருக்காது. முழுதாகப் பழுத்து இருக்காது. ஒரு பக்கம் காயாகவும், மற்றொரு பக்கம் பழுத்தும் காணப்படும். பழத்தை சாப்பிட்டுப் பார்த்தால் ஓர் இடத்தில் காயாகவும், மற்றொரு இடத்தில் பழுத்த மாதிரியும் இருப்பதை உணர முடியும். பழத்தின் தோல் பகுதி கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு சுருங்கியும் காணப்படும். மேலும் இவ்வகை பழம் உலர்ந்து போய் குறைவான பழரசமும் தரும். இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாழ்பழம் அதிக சதைப்பகுதியுடனும் ஜூஸ் நிறைந்ததாகவும் 
காணப்படும்.   

மாம்பழம் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டதா என்பதைக் கண்டுபிடிக்க, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மாம்பழத்தை அதில் போட வேண்டும். மூழ்கிய பழம் நல்லது என்றும், மூழ்காத பழம் தரம் அற்றது என்றும் தெரிந்து கொள்ளலாம். செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க Anti Dose எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இந்தப் பழத்தை சாப்பிடுவதை நிறுத்துவதே உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. ஒருவேளை மாம்பழம் சாப்பிட ஆசைப்பட்டால் ஆர்கானிக் கடைகளில் வாங்கி சாப்பிடலாம் அல்லது வீட்டிலேயே வளர்த்து சாப்பிடலாம். இவ்வாறு செய்வதால் மாம்பழத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளலாம்’’ என்கிறார்.- விஜயகுமார்

No comments

Powered by Blogger.