அதிகரிக்கும் ஒல்லி மோகம், விழிப்புணர்வா..? விபரீதமா..??
மக்கள் இப்போதெல்லாம் எடை குறைப்பு பற்றி அதிகம் பேசுகிறார்கள்... படிக்கிறார்கள்... சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களைப் பெருமையுடன் பகிர்கிறார்கள்... ஒல்லியாக இருப்பவர்களைப் பார்த்து பெருமூச்சு விடுகிறார்கள்... இவர்களுக்கு ஏற்றவாறு புதிதுபுதிதாக டயட் முறைகளும் முளைத்து வருகின்றன.
புதிதுபுதிதாக சிகிச்சைகளையும் மருத்துவமனைகள் அறிமுகப்படுத்துகின்றன. ‘ஸ்லிம்மாக வேண்டுமா’ வகையறா விளம்பரங்கள் எல்லா இடங்களையும் ஆக்கிரமிக்கிறது,அதிகரித்துவரும் இந்த ஒல்லிமோகம் ஆரோக்கிய விழிப்புணர்வா? இல்லை அழிவுக்கான விபரீதமா? நிபுணர்களிடம் பேசுவோம்...
‘எடை குறைப்பு விஷயத்தில் எண்ணற்ற தவறான நம்பிக்கைகள் நம் மக்களிடையே இருந்து வருகிறது. குறிப்பாக, டயட் விஷயத்தில் நிறைய தவறுகள் நடக்கின்றன’ என்கிறார் உணவியல் நிபுணர் வர்ஷா.எப்படி?‘‘அரிசி, கோதுமை மற்றும் தானியங்கள் எல்லாம் கார்போஹைட்ரேட் நிறைந்தவை. அவற்றை சாப்பிட்டால் உடல் எடைகூடும் என்ற தவறான எண்ணம் மக்களின் மனதில் முதலில் விதைக்கப்பட்டு விடுகிறது. ஆனால், இது பெரிய தவறு. உணவில் பாதியளவு முழுதானியங்களைச் சேர்த்துக் கொள்வதுதான் சரியான உணவு முறை.
இதேபோல, ‘எதை வேண்டுமானாலும்; எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்... ஆனால் எங்கள் மருந்தை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்’ என்ற பாணியில் வரும் விளம்பரங்கள் எல்லாமே மோசடியானவை. ஒரு மருந்தினால் எடையைக் குறைக்க முடியும் என்பது உண்மையே இல்லை.
இந்த பிரச்னைக்கு சரியான வழி, முறையான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவதுதான். காலை உணவைத் தவிர்த்தால் எடையைக் குறைக்கலாம் என்ற தவறான எண்ணம் இருக்கிறது. உண்மையில் காலை உணவை தவிர்த்துவிட்டு நேரடியாக மதிய உணவை எடுத்துக் கொள்ளும்போது, அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடலாம். காலை உணவை தவிர்ப்பவர்கள்தான் அதிக அளவு உடல்பருமன் பிரச்னையை எதிர்கொள்கிறார்கள் என்று ஓர் ஆய்வு சொல்கிறது.
Post a Comment