சைபர் உலகில் சின்னாபின்னமாகும் ஆன்மீக, பாரம்பரியங்கள்
-அஷ்ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் நளீமி-
"(லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்." (ஸுரதுல் லுக்மான் 31:16)
இணையதள,சமூக வலைதள பாவனைகள் அதிகரித்துள்ள ஒரு ஸைபர் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், முகநூல், வட்ஸ்அப், வைஃபர், ஸ்கைஃப் என இன்னும் எத்தனயோ தொடர்பூடகங்களில் புதிய தலைமுறையினர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதுவே உண்மை. தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப வசதிகள் சகலவிதமான, சமூக கலாச்சார,பாரம்பரிய பண்பாட்டு கட்டுக் கோப்புகளை கொடூரமாக சிதைத்துச் சின்னாபின்னமாக்குகின்ற பாதகமான அம்சங்களை நிறையவே கொண்டிருக்கின்றன.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை எங்கிருந்தாலும், எல்லா நிலைமைகளிலும்,தனிமையிலும், குழுமங்களிலும் அல்லாஹ் எங்களை அவதானித்துக் கொண்டிருக்கின்றான், ரகீப் அதீத் என்ற இரண்டு வானவர்கள் எமது கடுகளவே ஆயினும் எமது நடவடிக்கைகளை பதிவு செய்து கொண்டிருக்கின்றார்கள், நாளை மஹ்ஷரில், இறுதித் தீர்ப்பு நாளில் எமது பட்டோலைகள் இடக்கரத்திலோ வலக்கரத்திலோ வழங்கப்படும் என்ற ஆழமான ஆன்மீக நம்பிக்கைகள் ஒன்றே ஸைபர் உலக தீமைகளில் பேரழிவுகளில் இருந்து எம்மை பாதுகாக்க முடியும். அழகும், கவர்ச்சியும், காதலும், காம லீலைகளும் களியாட்டங்களும் இன்று எமது கையடக்க தொலை பேசிகள் வழியாக எமது தனிமைகளில் ஷைத்தானின் ஆதிக்கத்தை ஆதிகரிக்கச் செய்துள்ளன.
வயது வந்த இளைஞர்கள், யுவதிகள் மாத்திரமன்றி பருவமடையாத பாலகர்கள் கூட தவறான உறவுகளை வளர்த்துக்கொள்ள அல்லது தீயவர்களின் கயவர்களின் இச்சைகளுக்கு இரையாக அதிகரித்த சந்தர்பங்கள் இருக்கின்றன. இன்று பரபரப்பாக பேசப்படும் இளம் முஸ்லிம் தம்பதியினரின் பதிவு செய்யப்பட்ட காமலீலைகள் விவகாரம் உலகத்தில் காமலீலைகள் சந்தைக்குள் எவ்வாறு அவர்கள் ஈர்க்கப்ப்ட்டுள்ளார்கள், இருவருமோ அல்லது ஒருவரோ எவ்வாறு ஏமாற்றப்பட்டு இருக்கின்றார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ள ஒரு விவகாரம் மாத்திரமே. அது தொடர்பான பதிவுகளைப் பார்க்கும் பொழுது கவலையாக இருக்கிறது.
கடந்த வாரம் ஒரு ஜும்மா குத்பாவுக்கு சென்றிருந்தேன், நாம் சாப்பிடும்பொழுது வலக்கரத்தை பாவித்தல், தும்மும் பொழுது துஆ ஓதுதல் போன்ற விஷயங்களை விபராமாக சொன்னார்கள், அதற்கு முந்திய குத்பாவிலும் குத்பாவிற்கு குளித்து வெண்ணிற ஆடைகள் அணிந்துவருதல் போன்ற விடயங்கள் பேசப்பட்டன. குறிப்பாக அந்த பள்ளிவாயலுக்கு பெரும் தொகையான பாடசாலை பல்கலைக் கழக மாணவர்கள் வருகின்றார்கள். காலத்திற்கு தேவையான விதத்தில் எமது குத்பாக்களை நாம் ஓதல் வேண்டும், நோன்பு கால விடுமுறைகால பயிற்சிகளில் "இணைய உலகில் எமது இறையச்சம், இஸ்லாமிய பண்பாட்டு பரம் பரியம் பேணல்" போன்ற விடயங்களை நாம் பேசு பொருள்களாக எடுத்துக் கொள்ளல் வேண்டும்.
அறிமுகமானவர்கள் மத்தியில் வாழ்கின்ற எமது சிறார்கள் இளைஞர்கள் பக்குவமாக பவ்வியமாக பண்பாடாக நடந்து கொள்வார்கள் என்பதில் ஓரளவு நம்பிக்கை இருக்கிறது, ஆனால் அறிமுகமில்லாத உறவுகள் நட்புக்களுடன் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதிலேயே நாம் அவதானமாக இருக்க வேண்டும். முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் கிடைக்கின்ற தனிமை சுதந்திரம் என்பன அப்பாவி ஆண், பெண் பாலகர்கள், சிறார்கள்,பருவமெய்தியவர்களை நட்பு பட்டியலில் இணைத்து தகாத அரட்டைகள், பகிர்வுகள் என்பவற்றால் அவர்களுக்கும் அவர்களது அன்பு பெற்றோருக்கும் இழைக்கின்ற மிகப் பெரும் துரோகத்தனங்கள் மிகக் கொடிய பாவங்கள் என்பதனை புதிய தலைமுறையினருக்கு உணர்த்த வேண்டும்.
கல்லூரிக் கால உறவுகள் கல்யாணத்தின் பின்னும் தொடருகின்ற அவலம், குடும்ப உறவுகள் சீரழித்தல், விவாகரத்துகள், விவாகத்தின் பின்னும் தகாத உறவுகள் என நாளுக்கு நாள் செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அவசரமான உலகத்தில் பல்வேறு சமூக பொருளாதார காரணிகளால், நகர மயமாக்கல் வாழ்வொழுங்கினால் தாய் தந்தையரின் போதிய அரவணைப்பை கரிசனையை பெறாத பல சிறார்கள் மன அழுத்தத்தினை போக்கிக் கொள்வதற்காக அதிகரித்த இணைய மற்றும் முகநூல் பாவனைகளில் ஈடுபடுகின்றார்கள்.
குறிப்பாக இளம் வயதில் திருமணம் ஊக்குவிக்கப்படல் வேண்டும், தடையாக இருக்கின்ற சமூக பொருளாதார காரணிகள் கண்டறியப்பட்டு அவற்றிற்கான தீர்வுகள் குறித்து நாம் ஆராய வேண்டும். அழகிய இஸ்லாமிய வாழ்வு நெறியொன்றே எம்மை எமது இளம் தலைமுறையினரை, வருங்கால சந்ததியினரை ஸைபர் உலக சுனாமியில் இருந்து பாதுகாக்க முடியும். இணைய வாழ்வில் இஸ்லாமிய உளவியல் குறித்த ஆய்வுகளை புத்தி ஜீவிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் அவசரமாகவும் அவசியமாகம் மேற்கொள்ள வேண்டும். ஆழமான ஆன்மீக நம்பிக்கைகளை சிறார்களின் வாழ்வில் கட்டி எழுப்புவதில் எல்லோரும் கூடிய கவனம் செலுத்தல் வேண்டும்.
Post a Comment