அரச அதிகாரி, நாகரீகமான ஆடை, இயேசுவின் துணை கிடைக்கட்டும் என எமாற்றுகிறார்கள்..!
கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துலாவல கிரிமெட்டியான பிரதேசத்தில் தனியாக வசித்து வரும் வயோதிப பெண் ஒருவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ள இளைஞர் ஒருவர், அம்மூதாட்டியை ஏமாற்றி தான் ஓர் அரச அதிகாரி எனக்கூறி இருபதாயிரம் ரூபா பணத்தை தந்திரமாகப் பெற்றுக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக கொஸ்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞர் மூதாட்டியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு “இப்பிரதேசத்தில் திருடர்கள் உள்ளனர். அவர்களிடமிருந்து கவனமாக இருந்து கொள்ளுங்கள், உங்களுக்கு இயேசுவின் துணை கிடைக்கட்டும்” எனக் கூறிவிட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாகரீகமான ஆடை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ள குறித்த இளைஞர் தான் அரச நலன் நடவடிக்கைகள் தொடர்பான உயர் அதிகாரி எனக் கூறி அந்த வயோதிபப் பெண்ணின் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை சரியாகக் கூறி நடித்ததால் அம்மூதாட்டியும் அவரை நம்பியுள்ளார்.
19,500 ரூபா, பணத்தை தற்போது நீங்கள் தந்தால் அரசாங்கம் பல இலட்சம் ரூபா பணத்தை இன்னும் ஓரிரு தினங்களில் உங்கள் வங்கிக் கணக்குக்கு வைப்புச் செய்யும் எனக் கூறி குறித்த பணத்தைப் பெற்றுக் கொண்டு சென்றதோடு அங்கிருந்து இன்னுமொரு 500 ரூபாவையும் எடுத்துக் கொண்டு சென்றிருப்பது பின்னர் தெரிய வந்துள்ளதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பின்னர் சந்தேகம் ஏற்பட்டதால் அப்பெண் அயலவர்களுக்கு தெரியப்படுத்திய வேளையில் குறித்த இளைஞர் அங்கிருந்து சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கொஸ்வத்தை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment