தமிழ் மக்களும், சிங்கள மக்களும் சமனானவர்கள் - தெய்வங்களும் அப்படித்தான்..!!
சிறுபிள்ளைகள் தமது எதிர்கால வாழ்க்கையை வெற்றி கொள்வதற்கு சிறு பராயத்திலேயே அத்திவராம் இடப்படல் வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது நேற்று முன்தினம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்திராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
சிறுபிள்ளைகள் தமது எதிர்கால வாழ்க்கையை வெற்றி கொள்ளத்தக்கவகையில் சிறு பராயத்திலேயே அத்திவாரம் இடப்படல் வேண்டும் அந்த அத்திவாரத்தின் மீதே தான் அப் பிள்ளைகளின் எதிர்காலம் கட்டப்படவேண்டும். ஆகவே ஒரு குழந்தையின் அறிவை, ஆற்றலை வளர்க்கக்கூடிய திறமை ஒரு முன்பள்ளி ஆசிரியருக்கு இருக்கவேண்டும். அதற்கு ஆசிரியருக்கு அறிவு, திறமை, கல்விச் சான்றிதழ் மட்டும் போதாது. அதற்கும் மேலாக கருணை, பொறுமை, சிநேக மனப்பான்மை போன்றனவும் ஒன்றாக கலந்திருக்கவேண்டும். மாணவர்களுடைய சுபாவத்தை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அவ்வாறு இருந்தாலே ஒரு வெற்றிகரமான ஆசிரியராக பணியாற்றமுடியும்.
இத்தகைய ஆசிரியர்களை கவனமாக தேர்ந்தெடுக்கவேண்டும். பொருத்தமான தகுதியான தேர்ந்த ஆசிரியர்களை எடுப்பது கடினமான காரியமாகும். அதற்கான அரசாங்க நிறுவனம் தற்போது இல்லை. இந் நேரத்தில் ஆறுதல் நிறுவனம் செய்த சேவை நன்மையளிக்கக்கூடிய செயற்பாடாகும்.
அந்த வகையில் ஆசிரியர் தொழிலுக்கு தமது வாழ்வாதாரத்தை ஜீவனோபாயத்தை முன்னேற்றுவதற்காக தமது பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காக மாத்திரம் இத் தொழிலுக்கு வந்திருப்பின் அது அவர்களின் பலவீனமாகிவிடும். மாறாக இவ் ஆசிரியர் தொழிலில் இருப்பவர்கள் இதயத்தில் ஆர்வமும் அபிலாசையும் அன்பும் நிறைந்தவர்களாக இருக்கவேண்டும். பணம் வருமானம் ஆகியவற்றை மட்டுமே எதிர்பார்த்தால் அவரும் ஏனைய தொழிலாளர்கள்போல் ஆகி விடுவார். ஆசிரியர்களுக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கும் இடையில் வித்தியாசம் உண்டு. ஆசிரியர்கள் தமது தொழிலைச் செய்வதற்கு நல்ல சிந்தனையை மூலதாரமாக கொண்டிருக்கவேண்டும்.
ஆசிரியர்கள் நாட்டிற்கு சிறந்த பிரஜைகளை உருவாக்குவதற்கான தங்களது பூரண பங்களிப்பை வழங்கவேண்டும். மேலும் இந்நாட்டில் வாழுகின்ற இனங்களுக்கிடையே எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை. இங்கு குறிப்பாக வடக்குத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் அனைவரும் ஒன்றாகவே வாழ்கின்றார்கள்.
வடக்குமாகாணத்தின் முதலமைச்சரது குடும்பத்தினர் கூட சிங்கள மக்களுடன் நல்லுறவிலேயே இருக்கின்றார்கள். அதேபோன்று லக் ஷ்மன் கதிர்காமர் திருமணம் செய்தது கூட சிங்கள இனத்தவர் ஒருவரையே ஆகும். இவற்றை விட தெய்வ வழிபாட்டில் கூட தமிழ் மக்களது தெய்வங்களும் சிங்கள பௌத்த மக்களது தெய்வங்களும் ஒன்றாகவே தான் உள்ளன. இந்துக்கோயில்களில் இருக்கும் தெய்வங்கள்தான் பௌத்த கோவில்களிலும் இருக்கின்றன. அந்த வகையில் பார்க்கின்றபோது இந்நாட்டில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சமனானவர்கள். அதே போன்று நாட்டில் உள்ள அனைத்து இன மதத்தவர்களும் என அவர் தெரிவித்தார்.
Post a Comment