மகனின் இருதயத்தை வழங்கிய பெற்றோர், வீட்டைக் கொடுத்த ஜனாதிபதி
இலங்கையின் முதலாவது இருதய மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்ள தமது மகனின் இருதயத்தை வழங்கிய பெற்றோருக்கு அவர்கள் தற்போது வசிக்கும் இடத்திலேயே வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த தீர்மானத்தை தெரியப்படுத்துவதற்காக சத்திர சிகிச்சைக்கு மகனின் இருதயத்தை வழங்கிய தாய் மற்றும் தந்தை ஆகியோரை கண்டி வைத்தியசாலைக்கு இன்று அழைத்திருந்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி உடநுவர ஹெக்டயார் கொலனியில் வசித்து வந்த 22 வயதான பிரதீப் குமார சம்பத் என்ற இளைஞன் விபத்தில் உயிரிழந்ததுடன், இவருக்கு இரண்டு சகோதரிகள் இருக்கின்றனர்.
குடும்பத்தில் இருந்த ஒரே ஆண் வாரிசு சம்பத் என வைத்தியசாலையின் பணிப்பாளர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை எவராவது அகால மரணமடைந்தால், இரண்டு முறை சிந்திக்காது, அவரது உடல் உறுப்புகளை வேறு ஒருவருக்கு வழங்கி உயிரை காப்பாற்ற பங்களிப்பை வழங்குமாறு பிரதீப் குமார சம்பத்தின் தந்தை ஐ.ஜி. நந்தசேன கேட்டுக்கொண்டுள்ளார்.
Post a Comment