பௌத்த பீடங்கள், தமது நிலைப்பாட்டை பரிசீலிக்க வேண்டும் - ரிஸ்வி முப்தி
-ARA.Fareel-
பல் இன மக்களையும், பல சமயங்களையும் கொண்டுள்ள இலங்கைக்கு மத சுதந்திரத்தையும் உரிமைகளையும் வழங்கக்கூடிய புதியவோர் அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்புத் திருத்தங்கள் அவசியமாகும்.
நான்கு பௌத்த பீடங்களினதும் தேரர்கள் நாட்டுக்கு புதிய அரசியலமைப்போ அரசியல் அமைப்புத் திருத்தங்களோ தேவையில்லை என்று தெரிவித்துள்ள கருத்துகளை அவர்கள் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
நாட்டுக்கு புதிய அரசியலமைப்போ, அரசியலமைப்பு திருத் தங்களோ தேவையில்லை என்று பௌத்த பீடங்களின் தேரர்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள கருத்துகள் தொடர்பில் உலமா சபையின் விளக்கத்தை தெரிவிக்கையிலே இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
பெரும்பான்மை சமூகத்தின் உரிமைகள் அம்மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் என்பவை தொடர்பில் எமக்கு எந்த பிரச்சினையுமில்லை. அவற்றை நாம் எதிர்க்கவுமில்லை.
ஆனால், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இனவாத அமைப்புகள் இலங்கையில் முஸ்லிம்களுக்குத் தனியான சட்டம் தேவையில்லை, தமிழர்களுக்கு தேச வழமை சட்டம் தேவையில்லை என விவாதிப்பது தவறானதாகும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. பல்லின சமூகம் வாழும் நாட்டில் அனைத்து இன மக்களும் தமது சமயங்களை அனுஷ்டிப்பதற்கு உரிமையுண்டு.
இந்த நாடு எமக்கு மாத்திரம்தான் சொந்தமானது என எவருக்கும் உரிமை கொண்டாட முடியாது.
இது எமது நாடு. இந்நாட்டில் வாழ்பவர்கள் அனைவருக்கும் நாடு சொந்தமானதாகும். அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளது போன்று இந்நாட்டில் வாழும் சமூகங்கள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து வந்தனவே.
சமூகங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் பிரச்சினைகள், சந்தேகங்கள் நிலவுமென்றால் அவற்றைப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
இனங்களுக்கிடையில் நல்லுறவும், புரிந்துணர்வும் நிலவினாலே நல்லிணக்கம் பலப்படும்.
பல்லின சமூகத்தினருடன் எவ்வாறு ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதை புனித குர்ஆன் தெளிவாக எடுத்து விளக்கியுள்ளது. முஸ்லிம்கள் அனைவரையும் சகோதரர்களாகக் கருதுபவர்கள்.
புதிய அரசியலமைப்புக்கான ஏற்பாடுகள் துரித கதியில் இடம்பெற்றுவரும் சந்தர்ப்பத்தில் அதனை எதிர்க்காது அதனால் நாட்டுக்கு ஏற்படப்போகும் நன்மைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை புதிய அரசியலமைப்பை வரவேற்கிறது என்றார்.
Post a Comment