ஞானசாரருக்கு எதிராக, ஒரு நீதிபதியின் வரலாற்று முக்கியத்துவமிக்க வாக்குமூலம் - உச்ச தண்டனைக்கு வலியுறுத்து (விபரம் இணைப்பு)
'தொலைபேசி மணி அடித்ததாலும், கொட்டாவி விட்ட தற்காகவும் நீதிமன்றை அவமதித்ததாக சிறைத் தண்டனை வழங்கப்பட்ட வரலாறுகள் எமது நீதித்துறையில் உள்ளன. இந் நிலையில் நீதிமன்ற விசாரணையின் இடை நடுவே, நீதி வானுக்கு நேராக தனது விரல்களை நீட்டி, எக்னெலிகொட வழக்கின் சந்தேக நபர்களான இராணுவ வீரர்களுக்கு பிணை வழங்குமாறு நீதிவானுக்கே கட்டளை இட்டும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியும் நீதிமன்றை அவமதித்த ஞானசார தேரருக்கு உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.
அதனாலேயே நான் இந்த வழக்கை அரசியலமைப்பின் 105 (3) ஆவது அத்தியாயத்துக்கு அமைய மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு பாரப்படுத்தினேன். ஏனெனில் மேன் முறையீட்டு நீதிமன்றினால் இத்தகைய நடவடிக்கைகளுக்கு கடுமையான தண்டனையைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்று கொழும்பு மேலதிக நீதிவான் ரங்க திஸாநாயக்க நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றில் சாட்சியம் அளித்தார்.
நீதிமன்றுக்கு இவ்வாறான இடையூறு ஏற்படுத்தி, சிரேஷ்ட அரச சட்டவாதியை பேடித்தனமானவர் எனவும் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் உள்ளவர்களும் அப்படிப்பட்டவர்களே என்றும் கூறி அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வண்ணம் ஞானசார தேரர் நடந்துகொண்டார். இத்தகைய சம்பவம் ஒன்றுக்கு நான் எனது 12 வருட கால நீதிவான் சேவையில் முகம் கொடுத்ததே இல்லை. அதனால் அந்த சம்பவமும், நாளும் என்னால் மறக்க முடியாதது' என்றும் அவர் தெரிவித்தார்.
நீதிமன்றத்தை அவமதித்தமை மற்றும் சிரேஷ்ட அரச சட்டவாதிக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தொடர்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைகள் நேற்று ஆரம்பமானது. இதன் போதே , பிரதான சாட்சியான 3 ஆம் இலக்க சாட்சியாளர், ஹோமாகம முன்னாள் மாவட்ட, நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவானும் தற்போதைய கொழும்பு மேலதிக நீதிவானுமாகிய ரங்க திஸாநாயக்க மேற்படி சாட்சியத்தை வழங்கினார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்த போது, ஞானசார தேரர் ஹோமாகம நீதிவான் நீதிமன்றுக்குள் அத்து மீறியிருந்தார். இதன் போது நீதிமன்ற வளாகத்தில் வைத்து பிரசாத் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்தியதாக ஞானசார தேரர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனைவிட அன்றைய தினம் பெரும் தொகையான பிக்குகளுடன் ஞானசார தேரர் ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் உள் நுழைந்து நீதிவான் ரங்க திசாநாயக்கவை நோக்கி விரல் நீட்டி இராணுவத்தினரை பழி தீர்க்கும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தனது குரலை உயர்த்தி அச்சுறுத்தல் விடுத்திருந்தார். இதனால் அன்றைய தினம் முழுதும் ஹோமாகம நீதிவான் நீதிமன்றின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து நீதிமன்றை அவமதித்தமை, அரச அதிகாரியின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை மற்றும் குறித்த வழக்கின் சாட்சியாளரான சந்தியா எக்னெலிகொடவின் மனைவிக்கு அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச் சாட்டுக்களின் கீழ் அவரை கைது செய்யுமாறு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந் நிலையில் ஞானசார தேரர், 2016 ஜனவரி 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன் அவர் மீது குறித்த மூன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் நீதிமன்றை அவமதித்தமை தொடர்பிலான வழக்கு அப்போதைய ஹோமாகம நீதிவானும் தற்போது கொழும்பு மேலதிக நீதிவானுமாகிய ரங்க திசாநாயக்கவினால் விசாரணைக்காக மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட்டது.
இது தொடர்பிலான வழக்கின் சாட்சி விசாரணைகள் நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி எல்.டி.பி. தெஹிதெனிய, ப்ரீத்தி பத்மன் சுரசேன ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன் போது குற்றம் சுமத்தப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரும் மன்றில் பிரசன்னமாகியிருந்தார்.
விசாரணைகளை ஆரம்பிக்க சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய, வழக்கில் முன்னாள் ஹோமாகம நீதிவானும் தற்போதைய கொழும்பு மேலதிக நீதிவானுமாகிய ரங்க திஸாநயக்க, முன்னாள் அரசின் சிரேஷ்ட சட்டவாதியும் தற்போதைய பிரதி சொலிசிட்டர் ஜெனரலுமாகிய திலீப பீரிஸ் உள்ளிட்ட எட்டு சாட்சியங்களை ஞானசார தேரருக்கு எதிராக மன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக கூறி அப்பட்டியலை நீதியரசர்களுக்கு வழங்கினார்.
இதன் போது ஞானசார தேரர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா, ஏற்கனவே சாட்சிப் பட்டியல் தமக்கு வழங்கப்படவில்லை எனவும் அதனால் நேற்றைய தினம் உடனடியாக சாட்சி விசாரணைகளை ஆரம்பிப்பது தமது தரப்புக்கு பாதகமாக அமையும் என சுட்டிக்காட்டினார்.
எனினும் ஏற்கனவே இவ்வழக்குடன் தொடர்புடைய அனைத்து கோவைகளையும் ஞானசார தேரரின் சட்டத்தரணிக்கு வழங்கிவிட்டதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய சுட்டிக்காட்டிய நிலையில், ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வாவின் வாதத்தை நீதிபதிகள் நிராகரித்து சாட்சி விசாரணைகளை ஆரம்பித்தனர்.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரியவின் கேள்விகளுக்கு பதிலளித்த வண்ணம், வழக்கு அறிக்கைகளை பரிசீலித்து நீதிவான் ரங்க திஸாநயக்க சாட்சியம் அளித்தார்.
கேள்வி: எப்போது முதல் நீங்கள் நீதிவானாக கடமையாற்றுகின்ரீர்கள்?
பதில்: 2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல்
கேள்வி:2015 ஆம் ஆண்டு எங்கு சேவை செய்தீர்கள்?
பதில்: புத்தளம் மாவட்ட நீதிவானாக சேவையாற்றினேன்.
கேள்வி: 2016 ஆம் ஆண்டு எங்கு சேவை செய்தீர்கள்?
பதில்:2016 ஜனவரி முதல் ஹோமாகம மேலதிக மாவட்ட, நீதிவான் நீதிமன்ற நீதிவானாகவும் கடமையாற்றினேன்.
கேள்வி: அப்போது உங்கள் முன்னிலையில் ஊடகவியலாளர் ஒருவர் தொடர்புபட்ட வழக்கொன்று விசாரணைக்கு வந்ததா?
பதில்: ஆம்
கேள்வி: யார் அந்த ஊடகவியலாளர்?
பதில்: பிரகீத் எக்னெலிகொட
கேள்வி: எப்போது முதல் விசாரித்தீர்கள்?
பதில்: 2010 ஆம் ஆண்டு முதல் எக்னெலியகொட காணாமல் போனமை தொடர்பில் விசாரணை ஹோமாகம நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது. எனக்கு முன்னிருந்த நீதிவானும் அதனை விசாரித்துள்ளார். இதில் சந்தேக நபர்கள் 2015 ஆம் ஆண்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேள்வி: சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு நீர் உத்தரவுகளை வழங்கியுள்ளீரா?
பதில்: ஆம். குறித்த வழக்கு விசாரணைகளின் போது பல்வேறு பட்ட ஆட்சேபனைகள் முன்வைக்கப்படும். சில சமயங்களில் வாதப் பிரதிவாதங்கள் 2 மணி நேரத்துக்கும் நீடிக்கும்.
கேள்வி: சந்தேக நபர்களின் பிணையை நீர் நிராகரித்துள்ளீரா?
பதில்: ஆம், தண்டனை சட்டக் கோவையின் 296 ஆவது அத்தியாயத்தின் கீழ் குற்றச்சாட்டு இருந்தது. பிணை கோரி மேல் நீதிமன்றில் அவர்கள் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் நான் பிணையை நிராகரித்தேன்.
கேள்வி: சட்ட மா அதிபர் சார்பில் யாரும் ஆஜராவரா? யார் ஆஜராவர்?
பதில்: ஆம், சிரேஷ்ட அரச சட்டவாதி திலீப பீரிஸும் வசந்த பண்டாரவும் ஆஜராவர்.
கேள்வி: அந்த வழக்கின் இலக்கம் ஞாபகம் உள்ளதா?
பதில்: ஆம், பீ 74172010
கேள்வி: இந்த வழக்கின் விசாரணைகளின் இடை நடுவே ஏதாவது விஷேட சம்பவங்கள் இடம்பெற்றனவா?
பதில்: ஆம்
கேள்வி: எப்போது அந்த சம்பவம் பதிவானது?
பதில்: 2016.01.25
கேள்வி:அன்றைய தினம் சட்ட மா அதிபர் சார்பில் யார் மன்றில் ஆஜராகினர்?
பதில்: திலீப பீரிஸ் வந்ததாக ஞாபகம் உள்ளது.
கேள்வி: அப்போது சந்தேக நபர்கள் எத்தனை பேர்?
பதில்: ஒன்பது பேர்
கேள்வி: 9 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டீர்களா?
பதில்: ஆம், எல்லோரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டேன்.
என கூறிவிட்டு மன்றின் மன்னிப்பை கோரிய வண்ணம், 1 முதல் 6 வரையிலான சந்தேக நபர்களுக்கே விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்தேன். ஏனைய சந்தேக நபர்கள் பின்னரேயே கைது செய்யப்பட்டிருந்தனர் என சாட்சியத்தை வழக்குப் புத்தகத்தைப் பார்த்து திருத்தம் செய்தார்.
கேள்வி: அந்த வழக்கு நடவடிக்கை அன்றைய தினம் முடிந்ததா?
பதில்: ஆம்
கேள்வி: மற்றொரு நாளுக்கு வழக்கை ஒத்தி வைத்தீரா?
பதில்: ஆம்
கேள்வி: அதன் பின்னர் வேறு வழக்கொன்றை விசாரணைக்கு எடுத்தீரா?
பதில்: ஆம்
கேள்வி: எக்னெலிகொட வழக்குக்கு வந்த சட்ட மா அதிபர் திணைக்கள சட்டவாதிகள் மன்றில் இருந்து அப்போது வெளியேறியிருந்தனரா?
பதில்: அவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர்.
கேள்வி: அப்போது நீர் எடுத்துக் கொண்ட வழக்கு அல்லது அதன் இலக்கம் ஞாபகத்தில் உள்ளதா?
பதில்: இல்லை
கேள்வி: அதன் போது நடந்த சம்பவம் ஞாபகமா?
பதில்: ஆம், நன்றாக நினைவில் உள்ளது. மறு வழக்கை விசாரணைக்கு எடுத்த கணம் அந்த சம்பவம் இடம்பெற்றது.
எனது 12 வருட கால நீதிவான் சேவையில் நான் அத்தகைய ஒரு நிலைமைக்கு எப்போதும் முகம் கொடுத்ததே இல்லை. அதனால் அந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியாது.
கேள்வி: அந்த சம்பவம் என்ன?
பதில்: சம்பவத்தை விளக்க முன் அபோது ஹோமாகம நீதிமன்றின் நிலைமை பற்றி கூறியாக வேண்டும். அப்போது ஹோமாகம நீதிமன்றம் ஒரு தற்காலிக கட்டடத்திலேயே இயங்கியது. சிறிய இடம் அது. ஒரு வீட்டின் பிரதான அறையே நீதிமன்ற நடவடிக்கை நடைபெறும் இடமாக இருந்தது. 20 அடி நீளம் 30 அடி அகலம் இருக்கும். நீதிவானுக்கு நேராக சந்தேக நபர்கள் கூண்டு. இடையில் சட்டத்தரணிகளின் இருக்கைகள். பொது மக்களுக்கு என அமர இரண்டு நீண்ட கதிரைகள், 10 பேருக்கு கூடுதலாக அமர முடியாது. வழக்குக்கு வருவோர் மன்றின் வெளியே தகரத்தால் மறைக்கப்பட்ட இடத்தில் காத்திருந்து வழக்கு இலக்கம் வாசிக்கப்பட்ட பின்னரேயே உள்ளே வருவர்.
கேள்வி: பாதுகாப்பு இருந்ததா?
பதில்: வழமையான பாதுகாப்பு இருந்தது. விஷேடமாக இல்லை.
கேள்வி: அப்போது நடந்த சம்பவத்தை சொல்லுங்கள்?
பதில்: நான் 7417 ஆம் இலக்க வழக்கை விசாரணைக்கு எடுத்தேன். அப்போது 10 இற்கும் அதிகமான தேரர்கள் அங்கிருந்த மூன்று நீண்ட கதிரைகளின் உட்கார்ந்திருந்தனர்.
கேள்வி: எக்னெலிகொட வழக்கில் தேரர்கள் யாரேனும் சந்தேக நபராக இருந்தனரா?
பதில்: இல்லை
கேள்வி: விஷேடமாக நடந்தது என்ன?
பதில்: வழக்கு நிறைவுற்று மறு திகதி குறிக்கப்பட்டது. நான் மற்றைய வழக்கை விசாரிக்க முற்பட்ட போது, அங்கு அமர்ந்திருந்த தேரர் ஒருவர் எழுந்து எனக்கு நேராக ஒரு 15 அடி தூரத்தில் இருந்து குரலை உயர்த்தி என்னை நோக்கி விரலை நீட்டி 'நீதிவானே, இராணுவத்தினர் சிறையில் அடைக்கப்படுகின்றனர். புலிகள் விடுவிக்கப்படுகின்றனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.
கேள்வி:சட்டத்தரணி அல்லாத ஒருவர் நீதிமன்றில் இவ்வாறு பேசலாமா?
பதில்: இல்லை. இவ்வாறு பேச முடியாது.
கேள்வி: அவர் பேசும் போது நீர் ஏதாவது கூறினீரா?
பதில்: உண்மையில் நான் முதலில் திகைத்துப் போனேன். பின்னர் நீதிமன்ற மொழி பெயர்ப்பாளர் ஊடாக ' இது நீதிமன்றம், இதற்கு மதிப்பளிக்க கற்றுக்கொள்ளுங்கள். மன்றின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்' என அறிவித்தேன்.
கேள்வி: அப்போது என்ன நடந்தது?
பதில்: அவர் அதனை கேட்கவில்லை. மதிக்கவில்லை. தொடர்ந்து சத்தமிட்டார். இதன் போது மன்றில் இருந்த சட்டத்தரணிகளும் அவரைக் கைது செய்து கூண்டில் அடைக்குமாறு அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்.
கேள்வி: நீர் என்ன செய்தீர்?
பதில்: நான் யோசித்தேன். 10 இற்கும் மேற்பட்ட தேரர்கள் அங்கு வந்திருந்ததால் அவர்கள் திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்தவே வந்துள்ளதாக எனக்கு தோன்றியது.
இதன் போது தலையிட்ட தலைமை நீதிபதி தெஹிதெனிய தேரரின் நடவடிக்கை எப்படி இருந்தது என கேட்டார்.
பதில்: எனது கடமைக்கும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் பாரிய இடையூறாக இருந்தது. அது நடவடிக்கைகளைப் பாதித்தது. அவர் அப்படி நடந்துகொண்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதன் போது நீதிபதி பத்மன் சூர சேன பின்வருமாறு கேள்வி எழுப்பினார்?
கேள்வி: அவரது தொனி எப்படி இருந்தது?
பதில்: நீதிமன்றுக்கு சவால் விடுக்கும் தொனியது. சந்தேக நபர்களை விடுவிக்க கட்டளை இடுவதைப் போன்று இருந்தது.
கேள்வி: அதன் பின்னர் என்ன நடந்தது:
பதில்: தேரர் கத்திக்கொண்டிருக்கும் போதே, வெளியே சென்ற சிரேஷ்ட சட்டவாதி திலீப் பீரிஸும் சட்டத்தரணி உபுல் குமரப்பெருமவும் உள்ளே வந்தனர். எக்னெலிகொட வழக்கில் தேரருக்கு எந்த தொடர்பும் இல்லை. எனவே அவருக்கு பேச முடியாது என திலீப் பீரிஸ் கூறினார்.
கேள்வி: தேரைக் கைது செய்தீரா?
பதில்: நீதிமன்ற கட்டமைப்பு சட்டத்தின் 55 ஆவது அத்தியாயத்தின் கீழ் தேரைக் கைது செய்திருக்கலாம். நான் யோசித்துக்கொண்டிருந்த போதே திலீப் பீரிஸ் உள் நுழைந்து தேரரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதன் போது தேரரின் பேச்சுக்கள் மேலும் ஆக்ரோஷமடைந்தது. திலீப் பீரிசையும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளை பேடித்தனமானவர்கள் எனவும் அவர் திட்டி அச்சுறுத்தினார்.
அதன் பின்னரேயே அவர் மன்றில் இருந்து வெளியேறினார்.
கேள்வி: அதன் பின்னர் ஏதும் உத்தரவுகளைப் பிறப்பித்தீரா?
பதில்: ஆம். குற்றவியல் சட்டத்தின் 40 ஆவது அத்தியாயத்துக்கு அமைய தேரரைக் கைது செய்து மன்றில் ஆஜர் செய்ய ஹோமாகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டேன்.
நீதிவான் என்ற ரீதியில் நீதிமன்ற அமைப்பு சட்டத்தின் 55 (2 ) ஆவது அத்தியாயத்தின் கீழும் அரசியலமைப்பின் 105(3) ஆவது அத்தியாயத்தின் கீழும் தேரர் குற்றம் இழைத்துள்ளமையை உணர முடிந்தது. அதனாலேயே அந்த உத்தரவை நீதிவான் என்ற ரீதியில் எனக்குள்ள அதிகாரத்திற்கு அமைய பிறப்பித்தேன்.
கேள்வி: யார் அந்த தேரர் என்பது தெரியுமா?
பதில்: ஊடகங்கள் வாயிலாக அந்த தேரரை எனக்கு தெரியும். அவர் ஜனரஞ்சகமானவர். எனினும் நீதிவான் என்ற ரீதியில் தனிப்பட்ட கருத்துக்களை கடமையில் கலக்க முடியாது. அதனால் சட்டத்தரணிகளிடம் அது தொடர்பில் கோரினேன். அப்போது அங்கிருந்த சட்டத்தரணி உபாலி சேனாரத்ன அவர் கலகொட அத்தே ஞானசார தேரர் என்று உறுதிசெய்தார். அதனையடுத்தெ கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய ஹோமாகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கட்டளையிட்டேன்.
கேள்வி: அவரைக் கைது செய்து ஆஜர் செய்தனரா?
பதில்: ஆம். மறு நாள் 2015. ஜனவரி 26 ஆம் திகதி ஆஜர் செய்தனர்.
கேள்வி: அப்போது என்ன உத்தரவைப் பிறப்பித்தீர்?
பதில்: விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டேன்.
கேள்வி: பின்னர் என்ன செய்தீர்?
பதில்: நீதிமன்றில் இருந்த சட்டத்தரணிகள் பலர் கருத்து தெரிவித்தனர். தேரரின் நடவடிக்கைகளி 40042 எனும் தனியான வழக்காக பதிவு செய்தேன்.
கேள்வி: தேரருடன் உங்களுக்கு தனிப்பட்ட கோபங்கள் உள்ளதா?
பதில்: இல்லை
கேள்வி: மேலதிக நடவடிக்கைகள் தேரருக்கு எதிராக எடுத்தீரா?
பதில்: நீதிவான் என்ற ரீதியில் என் முன்னால் இரு முறைகள் இருந்தன. ஒன்று நீதிமன்ற அமைப்பு சட்டத்தின் 55 (2) ஆம் அத்தியாயத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். மற்றையது அரசியலமைப்பின் 105 (3) ஆவது அத்தியாயத்தின் கீழ் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு பாரப்படுத்துவதாகும். தேரர் நடந்துகொண்ட முறைமையை சிறிதாக எடுத்துக்கொள்ள முடியாது. நீதிமன்ற அமைப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எ டுத்தால் சிறிய தண்டனை ஒன்றே அவருக்கு கிடைக்கும்.
தொலைபேசி மணி அடித்தல், கொட்டாவி விட்டமைக்காக நீதிமன்ற அவமதிப்பு என்று சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வரலாறுகள் எமது நீதித் துறையில் உள்ளன.
அதனோடு ஒப்பிடும் போது, கடும் தண்டனை வழங்க முடியுமான சட்ட நடவடிக்கைகாகவே வழக்கை மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு மாற்றினேன்.
2016 மார்ச் 8 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி விஜித் மலல்கொடவுக்கு கடிதம் எழுதி வழக்கை பாரப்படுத்தினேன். அதனுடன் 12 சட்டத்தரணிகளின் சத்தியக் கடதாசியையும் இணைத்திருந்தேன். என சாட்சியம் அளித்தார்.
இதனையடுத்து ஞானசார தேரரின் சட்டத்தரணி மனோகர டி சில்வா குறுக்குக் கேள்விகளை கேட்டார். குறிப்பாக சம்பவம் நடந்து 53 நாட்களின் பின்னர் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு வழக்கை மாற்றியதை சுட்டிக்காட்டி, நீண்ட நாள் எடுத்துக் கொண்டதை சவாலுக்கு உட்படுத்தினார். எனினும் நீதிபதிகள் அதனை நிராகரித்தனர்.
இதனைவிட, 40042 வழக்கின் ஆவணத்துக்கும் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்துக்கும் இடையிலான வித்தியாசங்களையும் அவர் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.
இந் நிலையில் வழக்கானது இன்றைய தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இன்று பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸின் சாட்சியம் பதிவு செய்யப்படவுள்ளது.
நீதிபதிக்கே இந்த நிலமையா யாருப்ப இதற்குக் தீர்ப்பு வழங்கப்போகிறார்கள் வெட்கம் வெட்கம் வெட்கம்
ReplyDelete