காத்தான்குடியில் கால்பந்தாட்டத்தில் கத்திக்குத்து
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடையில் கால்பந்தாட்டப் போட்டியில் ஏற்பட்ட முறுகல் கத்திக்குத்தாக மாறியதில் ஒருவர் படுகாமடைந்ததோடு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் காங்கேயனோடையைச் சேர்ந்த முஹம்மட் இஹ்லாஸ் (வயது 26) என்ற இளைஞன் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரான காங்கேயனோடையைச் சேர்ந்த முஹம்மட் இம்ரான் (வயது 22) என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
பெருநாள் சிறப்பு நிகழ்வாக சனிக்கிழமை இரவு காங்கேயனோடையிலுள்ள பொது விளையாட்டு மைதானத்தில் இரவு நேர கால்பந்தாட்டப் போட்டி இடம்பெற்றுள்ளது.
இதில் கல்முனை சனிமூன் விளையாட்டுக் கழக கால்பந்தாட்ட வீரர்களும், காங்கேயனோடை நியூ ஸ்டார் கழக உதைப்பந்தாட்ட வீரர்களும் போட்டியில் பங்கு பற்றியுள்ளனர்.
இவ்வேளையில் தமக்கு இப்போட்டியில் பங்குபற்ற வாய்ப்பளிக்கப்படவில்லை என்று ஆத்திரப்பட்ட காங்கேயனோடையிலுள்ள சில இளைஞர்கள் மைதானத்திற்குள் புகுந்து பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளனர்.
அவ்வேளையில் முஹம்மட் இஹ்லாஸ் என்பவருக்கு முதுகுப் புறத்தில் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்றதும் உடனடியாக குறித்த மைதானத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment