பார்வையிழந்த ஜாகிர் ஹூசைன், கற்றுத்தரும் வாழ்க்கை பாடம்..!
ராமநாதபுரத்தில் காமன் கோட்டை கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஜாஹிர் ஹூசைன் சிறு வயதிலேயே பார்வையிழந்தவர். இளைஞனாக இருந்த போது இவரது நண்பர்கள் இவரை ஏமாற்றி பணம் பறித்துள்ளனர். இதனை எல்லாம் படிப்பினையாகக் கொண்டு தற்போது சொந்தமாக ஒரு கறி கோழிக் கடை வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கபுனரி தாலுகாவில் உள்ள புழுதிபட்டியில் வசித்து வருகிறார். இவரது கடை மதுரை திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. காலை ஏழு மணிக்கெல்லாம் சரியாக வந்து கடை திறக்கும் இவர் இரவு ஏழு மணி வரை உழைக்கிறார். எவரது உதவியும் இல்லாமல் கோழியை நிறுப்பது கோழியை அறுப்பது பிறகு அதனை சுத்தம் செய்து நிறுத்து கொடுப்பது என்று அனைத்தையும் மிக லாவகமாக கையாள்கிறார்.
ஞாயிற்றுக் கிழமைகளில் 10 ஆம் வகுப்பு படிக்கும் இவரது மகன் தந்தைக்கு உதவியாக வருகிறார். மற்ற நாட்களில் தனி ஆளாக நின்று கடந்த 20 வருடமாக சிறப்பாக தொழில் செய்து வருகிறார் ஜாஹிர் ஹூசைன்.
கை கால்கள் கண்கள் நலமாக உள்ள பலர் உழைக்காமல் சோம்பேறிகளாக காலத்தை கடத்துகின்றனர். அந்த சோம்பேறிகளுக்கு ஒரு பாடமாக ஜாஹிர் ஹூசைன் திகழ்கிறார் என்றால் மிகையில்லை.
”உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக்கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம் அல்லது மறுக்கவும் செய்யலாம். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
புகாரி: 1470, 1471.
” தம் தேவைக்கு அதிகமாக மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூட சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்… ‘யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான் யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான் மேலும், பொறுமையை விடச் சிறந்த, விசாலமானஅருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’.
புகாரி: 1474, 1475.
Post a Comment