சதிப்புரட்சி நடந்ததா..? முட்டாள்தனமான செய்தி என்கிறது சவூதி அரேபியா
சவூதி அரேபியாவின் முன்னாள் முடிக்குரிய இளவரசர் முஹமது பின் நயெப், வலி நிவாரண மருந்துகளுக்கு அடிமையானதாலேயே தனது பதவியை வலுக்கட்டாயமாக துறக்க நேர்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சவூதி மன்னர் சல்மான், கடந்த மாதம் முடிக்குரிய இளவரசர் நயெப்பை பதவி நீக்கி தனது மகன் முஹமது பின் சல்மானுக்கு அந்த பதவியை வழங்கினார்.
இந்நிலையில் இந்த மாற்றம் குறித்து நயெப்புக்கு நெருங்கிய வட்டாரம் ஒன்றை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் புதிக தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜுலை 20 ஆம் திகதி நயெப்புக்கு மன்னர் சல்மான் திடீர் அழைப்பொன்றை விடுத்துள்ளார். மக்காவில் உள்ள அரச மாளிகையின் நான்காவது மாடியில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
“நயெப்பை சந்திக்க மன்னர் வந்தபோது அவர்கள் இருவருமே அறையில் தனியாக இருந்தனர். மன்னர் நயெப்பிடம், ‘உங்களது பழக்கம் நீங்கள் எடுக்கும் முடிவுகளில் ஆபத்தான தாக்கங்களை செலுத்துகின்றன. அதற்கு சிகிச்சை பெறும்படி கூறிய ஆலோசனையை நீங்கள் கேட்கவில்லை. நீங்கள் பதவி விலக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ என்று மன்னர் குறிப்பிட்டிருக்கிறார்” என நயெப்புக்கு நெருங்கிய வட்டாரம் தகவல் அளித்துள்ளது.
இதன்மூலம் அரண்மனை சதிப்புரட்சி ஒன்றின் மூலமே நயெப் பதவி கவிழ்க்கப்பட்டிருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்த செய்தி முட்டாள்தனமாக இருப்பது மட்டுமல்லாமல் உண்மையற்றதாக உள்ளதென சவூதி அரசின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தம்மை பதவியில் இருந்து நீக்கும் முடிவு குறித்து நயெப் அதிர்ச்சி அடைந்ததாக ஆளும் சவூத் குடும்பத்தின் மூன்று உறுப்பினர்கள், நான்கு அரபு அதிகாரிகள் மற்றும் பிராந்திய இராஜதந்திரிகள் ரோய்ட்டர்ஸுக்கு குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment