Header Ads



கட்டார் - சவுதி முறுகலில், தோல்வி கண்டதா அமெரிககா..?


வளைகுடா நாடுகளுக்கு இடையில் இடம்பெற்றிருக்கும் முறுகலை தனிக்கும் முயற்சியாக பிராந்தியத்திற்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன், சவூதி அரேபியா மற்றும் மூன்று அரபு கூட்டணி நாடுகளின் அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைகளை பூர்த்தி செய்துள்ளார். எனினும் இந்த சந்திப்புகளில் முன்னேற்றங்கள் எட்டப்பட்டதற்கான எந்த அறிவிப்பும் உடன் வெளியாகவில்லை.

சவூதியின் ஜித்தா நகரில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் டில்லர்ஸன் குவைட் திரும்பியுள்ளார். வளைகுடா பதற்றத்தில் குவைட் மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

முன்னதாக கட்டார் சென்ற அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்த நாட்டுடன் பயங்கரவாத நிதிக்கு எதிரான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டார். சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன் மற்றும் எகிப்தின் பிரதான விடயங்கள் உள்ளடக்கப்பட்டதாகவே தீர்மானம் இருக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

தீவிரவாதத்திற்கு உதவுவதாகக் கூறி கடந்த ஜுன் 5 ஆம் திகதி நான்கு நாடுகளும் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்தன. கட்டார் மற்றும் இந்த நான்கு நாடுகளும் அமெரிக்காவுடன் நெருக்கமான நட்புக் கொண்டுள்ளன.

இந்த பிரச்சனையை தீர்க்கும் முயற்சியாக டில்லர்ஸன் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து பேச்சுார்த்தை நடத்தினார். இதன்போது அவர் சவூதி மன்னர் சல்மான் மற்றும் முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான் ஆகியோரையும் சந்தித்து பேச்சுார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் டில்லர்ஸன் கட்டாருக்கு விஜயம் செய்து அந்நாட்டு தலைவர் ஷெய்க் தமீம் பின் ஹமத் அல்தானியை சந்தித்து ஜத்தாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து விளக்கம் அளித்தார்.

எனினும் டில்லர்ஸனின் விஜயத்தால் பிரச்சினையை தீர்ப்பது சாத்தியமில்லை என்று ஐக்கிய அரபு இராச்சிய வெளியுறவு அமைச்சர் ஷெய்க் அப்துல்லாஹ் பின் செயித் அல் நஹயான் குறிப்பிட்டார்.

“இது பதற்றத்தை தணிக்கும், வெறுமனே பேச்சுவார்த்தையை தள்ளிப்போடும், ஆனால் அது எதிர்காலத்தில் வளரும்” என்று ஸ்லோவாக்கியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அல் நஹயான் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.