சேவையாற்றவே நான் விரும்புகின்றேன் - கோத்தபாய
சரியான தலைமைத்துவத்தின் கீழ் சேவையாற்றவே நான் விரும்புகின்றேன். மாறாக அரசியலில் கால் பதிக்க நான் தயாரில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான சட்டமூலம் இராணுவத்தை தண்டிக்கும் வகையிலேயே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக்குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறிகையில்,
காணாமல் ஆக்கப்படுவோர் தொடர்பில் கொண்டுவரவிருந்த சட்டமூலம் தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ள போதிலும் இதனை நிரந்தரமாக தடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் இந்த சட்டமூலத்தில் உள்ள விடயங்கள் அனைத்தும் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர தியாகம் செய்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும். இராணுவ வீரர்களை தண்டிக்க அனைவரும் துணைபோனதாக அமைந்துவிடும்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இன்னும் எம்மை ஊழல் குற்றவாளிகள் என்ற பெயரில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றதே தவிர இதுவரையில் அவர்கள் முன்வைத்த எந்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் உண்மைகளை நிரூபிக்க முடியவில்லை.
ஆகவே, இவர்கள் பொய்களை கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பது தெளிவாகின்றது. ஆகவே, இவர்கள் எம்மை பழிவாங்கவே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது தெளிவாக தெரிகின்றது. எம்முடன் இணைந்து செயற்பட்ட நபர்களே இன்று எமக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். ஆகவே, அவர்கள் எமக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்க முன்னர் மனச்சாட்சியை கேட்க வேண்டும்.
இப்போது மக்கள் நியமித்துள்ள அரசாங்கம் மிகவும் பொருத்தமில்லாத ஒரு அரசாங்கமாகும். மக்களின் உண்மையான பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளாது தமது தேவைக்கான ஆட்சியை இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். எனவே, பொருத்தமான தலைமைத்துவத்தை மீண்டும் உருவாக்க மக்கள் முன்வரவேண்டும். எனினும் அரசியல் பயணத்தை மேற்கொள்ள நான் விரும்பவில்லை. சரியான அரசியல் தலைமையின் கீழ் சேவையாற்றவே நான் விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment