முஸ்லிம்கள் கட்சியைப் பார்க்கவில்லை, மஹிந்தவையே பார்த்தனர் - பௌஸி
ஸ்ரீல. சு. கட்சிக்கு எதிராக தனிக் கட்சி அமைத்துக்கொண்டு ஆட்சியை கைப்பற்றலாமென்ற சிலரின் பகற் கனவுக்கு இடமளிக்கமுடியாது என இராஜாங்க அமைச்சர் ஏ. எச். எம். பௌஸி தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் மக்கள் கட்சியைப் பார்க்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷவையே பார்த்தனர். தமக்கான பாதுகாப்பும் உரிமையும் பாதுகாக்கப்படாத நிலையிலேயே அவர்கள் அவரைத் தோற்கடித்தனர். இந்த வகையில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை மக்கள் அனைவருமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாகவே உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
குறைபாடுகள், சிறு சிறு பிரச்சினைகள் உள்ளபோதும் அவற்றை சரிசெய்துகொண்டு எதிர்காலத்தில் ஸ்ரீல. சு. கட்சி அரசாங்கத்தை அமைப்பதே இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீல. சு. கட்சியின் செய்தியாளர் மாநாடு கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவும் கலந்துகொண்ட இம் மாநாட்டில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பௌஸி,
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்று இணைந்த அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு எமக்கு அழைப்பு விடுத்தார். நாம் அவரோடு இணைந்து பொதுத் தேர்தலிலும் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 100க்கு 100 வீதமான முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே வாக்களித்தனர். இன்றும் அவர்கள் ஜனாதிபதி மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ளனர்.
கட்சியில் மாறுபட்ட சிந்தனை கொண்டிருந்த சிலருக்கு எதிர்க் கட்சியில் அமர்வதற்கான அனுமதியை ஜனாதிபதி வழங்கினார். எனினும் அவர்களுக்கு தனிக் கட்சி அமைக்க அனுமதியளிக்கவில்லை. இப்போது அவர்கள் கட்சிக்கு எதிராக செயற்படுகின்றனர். ஸ்ரீல. சு. கட்சியை பிளவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். டலஸ் அழகப்பெரும, தினேஷ் குணவர்தன போன்றோர் ஆட்சியமைப்பதற்கு தயாராகியுள்ளனர். அது அவர்களால் முடியாது. இந்த அரசாங்கத்தை வீழ்த்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் நாம் பாதுகாப்போம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். முன்பிருந்த ஜனாதிபதிக்கான அதிகாரம் இப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடையாது. முன்பு ஜனாதிபதி நினைத்தால் அரசாங்கத்தை மாற்றலாம். இப்போதுள்ள அதிகாரத்தின்படி ஜனாதிபதிக்கு கூட அவ்வாறு செய்ய முடியாது.
ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாதுங்கவின் காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவோடு முரண்பட்டு அவர் அரசாங்கத்தை மாற்றினார். இப்போது அவ்வாறு செய்ய முடியாது. 19வது திருத்தம் அதற்கு வழிவகுத்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment