முஸ்லிம்கள் மீள்குடியேற, விக்கினேஸ்வரன் தடை - பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு
வடக்கிலிருந்து புலிகளின் பிரபாகரனால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கு அதிகாரத்தில் உள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது தடையாக உள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் சபையில் குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தனிநபர் பிரேரணை மீதான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அவர்,
இன்றைய (நேற்று) ஒழுங்குப் பத்திரத்தில் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான முக்கியமான தனிநபர் பிரேரணையும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
எனினும் விவாதத்தை மதிய போசன இடைவேளைக்கு நிறுத்தாது தொடர்ந்தும் நடத்த சபை தீர்மானித்தது. வெள்ளிக்கிழமையால் முஸ்லிமாகிய நான் ஜூம்மா தொழுகைக்கு சென்றிருந்தேன். இந்தபிரேரணை கடந்த காலங்களில் மூன்று தடவைகள் நான் சபைக்கு சமுகம் தராத நிலையிலேயே அறிவிக்கப்பட்டு கைவிடப்பட்டிருக்கின்றது.
முஸ்லிம் உறுப்பினர்கள் ஜூம்மா தொழுகைக்குச் செல்ல முன்னர் அவர்களின் பிரேரணைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றிய விடயம் முக்கியமானது. வடக்கிலிருந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்கு வடமாகாணத்தில் உள்ள முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தடையாக உள்ளார். அவர் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இந்தப்பிரேரணையின் முக்கியத்துவத்தினை புரிந்து கொள்ளுங்கள். எனவே, வெ ள்ளிக் கிழமைகளில் தனிநபர் பிரேரணையை விவாதிக்கும்போது முஸ்லிம் உறுப்பினர்களின் பிரேரணையை முற்கூட்டியே எடுக்க வேண்டும் என்றார்.
Post a Comment