வங்குரோத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும், அடிவருடிகளும் என்மீது வசைபாடுகின்றனர் - ரிஷாட்
போரின் பிடியில் இருந்து தப்பி முள்ளுக்கம்பிகளுக்குள்ளே தஞ்சமடைந்து வாழ்ந்த தமிழ் மக்களைக் குடியேற்றுவதில் முன்னுரிமை கொடுத்து செயற்பட்டதனாலேயே மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த இறுதிக்காலப்பகுதியில் வடக்கு முஸ்லிம்களை குடியேற்ற முடியாது போனதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
பள்ளமடு-பெரியமடுவுக்கான பாதை திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர். அமைச்சர் கூறியதாவது,
வங்குரோத்து முஸ்லிம் அரசியல் வாதிகளும் அவர்களின் அடிவருடிகளும் மீள்குடியேற்ற அமைச்சராக நான் இருந்த போது முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அக்கறை காட்டவில்லை என இப்போது வசை பாடுகின்றனர். மனச்சாட்சியையும் மனிதாபிமானத்தையும் முன்னிலைப் படுத்தியதானலயே யுத்தத்தினால் நிர்க்கதியான தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்தில் முன்னுரிமை கொடுத்து உழைத்தேன். அகதி வாழ்வின் கொடூரங்களை அணு அணுவாக அனுபவித்து துன்பத்தில் உழன்றவன் என்றவகையில் தமிழ் மக்களின் பரிதாப நிலை வேதனையைத் தந்தது. அதனால் தான் அந்த வேளையில் அவர்களின் குடியேற்றத்துக்கு பாடுபட்டேன்.
நாங்கள் என்ன தான் இதய சுத்தியுடனும் நேர்மையுடனும் பணியாற்றினாலும் காழ்ப்புணர்வு கொண்டவர்கள் குற்றசாட்டுக்களை அடுக்கி கொண்டே போகின்றனர்.அரசியல் ரீதியில் இலகுவாக வீழ்த்துவதற்கான ஆயுதமாக ஊழல்,திருட்டு,கொள்ளை என்ற கடுஞ்சொற்களை என்மீது தொடர்ச்சியாக பிரயோகித்து மோசமாக தாக்குகின்றனர். நேர்மையான பணிகளில் ஈடுபட்டு இருக்கும் அமைச்சர் டெனீஸ்வரன் மீதும் இப்போது இதேவகையான குற்றசாட்டுக்களை அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் சுமத்திவருகின்றனர்.எடுத்த எடுப்பிலேயே ஓர் அரசியல்வாதியை மனம்போன போக்கில் குற்றம்சாட்டுவது பிற்போக்கு சக்திகளுக்கு கைவந்த கலையாக உள்ளபோதும் எமக்கு அது வேதனையானதே இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Post a Comment