முஸ்லிம்கள் தாக்கப்பட்டபோது, குரல் கொடுத்தவர்கள் நாங்கள் - மாவை
தமிழ் மக்களின் பலம் தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் மிகவும் பலமாக இருந்தது. அது போன்றுதான் இன்றும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான த.தே.கூட்டமைப்பு சர்வதேச மட்டத்திலும் பலம் பெற்று வருகின்றது என தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் பொன்விழாக்காணும் கலாபூசனம் சலீமை கௌரவிக்கும் நிகழ்வு நிந்தவூர் பிரதேசசபை மண்டபத்தில் நேற்று கலாபூசனம் மீரா இசடீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
தமிழ் சமூகமும் முஸ்லிம் சமூகமும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற பெரும் எண்ணங்கொண்டிருந்தவர் தந்தை செல்லா. 1949 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் மாநாட்டிலே தமிழ் பேசுகின்ற முஸ்லிம் மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை இருக்கின்றது என்பதனை அவர் அன்று கூறியிருந்தார்.
புத்தளத்திலும் காலியிலும் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டபோது குரல் கொடுத்தவர்கள் நாங்கள். முஸ்லிம் அரசியல் வாதிகள் நாடாளுமன்றதத்தில் இருந்த போதும் தந்தை செல்வாதான் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக குரல் கொடுத்திருந்தார்.
தற்போது சிங்கள தேசத்தில் இருக்கும் அரசியல்வாதிகளினாலும் குறிப்பாக பௌத்த துறவிகளும் இந்த வார்த்தையை தவிர்க்குமாறு வற்புறுத்தி வருகின்றார்கள்.
இப்போது ஒருமித்த இலங்கை என்ற சொல்லை பயன்படுத்துகின்றார்கள். மாகாணத்திற்குரிய சகல அதிகாரங்களையும் பகிருகின்றபோது கேள்வி எழுப்பப்படுகின்றது.
அன்று விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திய பலத்துடனும், தமிழ் மக்களது பலத்துடனும் இருந்த போது முஸ்லிம் மக்களும் எங்களுடன் இருந்தபோது சிறிய தேசிய இனங்களின் பலம் மிகவும் மேலோங்கி இருந்தது.
ஆனால் இன்றைக்கு எமது மக்களுடைய ஜனநாயக பலம் சர்வதேச தீர்மானங்கள் எங்களுக்கு பலமாக இருக்கின்றதா இல்லையா என்பதனை சிந்தித்து பாருங்கள்.
மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மேற்பார்வை செய்வதற்கு இலங்கைக்கு வருகின்றார்கள்.
ஆயுத பலம் இல்லாமல் இருந்த போது ஆயுத பலமாக இருந்து, ஊழல் ஆட்சியை மாற்றுவதற்கு பலமாக இருந்தோமா இல்லையா?
தமிழர்கள் முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இராணுவ பலம் மிக்க கொடூர ஆட்சியை மாற்றியிழுக்கின்றோம். இது பலம் இல்லையா இதனை எண்ணிப்பாருங்கள் என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்த நிகழ்விற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மற்றும் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உட்பட பல பிரதி அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்கள் அரச உயரதிகாரிகள் கல்விமான்கள் ஊடக நிறுவனங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment