"காதோடு கோபித்துக்கொண்டு, கழுத்தை அறுப்பது"
வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் முஸ்லிம் காங்கிரசை போன்றே அதிலிருந்து பிரிந்த ஹசனலி போன்றோரும் நிலையான கருத்தின்றி தடுமாறுகிறார்கள் என உலமா கட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்ததாவது
வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டும் என மு. கா தலைவர் அஷ்ரப் விரும்பினார் என ஹசனலி சொல்வது அவர் மீதான இட்டுக்கட்டாகும். வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டதானது முஸ்லிம்களின் அனுமதியின்றி முஸ்லிம்கள் மீது எழுதப்பட்ட அடிமை சாசனம் என அஷ்ரப் பல தடவை கூறியுள்ளார். வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதாயின் முஸ்லிம் மாகாணம் வழங்கப்பட வேண்டும் என்ற சாத்தியமற்ற நிபந்தனையை அவர் முன் வைத்தமைக்கு காரணம் வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக்கூடாது என்பதற்காகவே.
அத்துடன் இனி வடக்கும் கிழக்கும் பிரியாது என்றே அஷ்ரப் நம்பியிருந்தார்.
அதிஷ்டவசத்தால் அஷ்ரபின் மறைவுக்குப்பின் வடக்கும் கிழக்கும் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் பிரிந்தது. ஆனாலும் இன்று வரை வடக்கும் கிழக்கும் தொடர்ந்தும் பிரிந்துதான் இருக்க வேண்டும் என மு. காவின் தலைமை கூறவில்லை. அக்கட்சியின் செயலாளராக ஹசனலி இருந்த போதும் தென் கிழக்கு அலகு தருவதாயின் வடக்கையும் கிழக்கையும் இணைக்கலாம் என மக்களை ஏமாற்றும் கருத்துக்களையே வெளியிட்டுக்கொண்டிருந்தார்.
மு. காவிலிருந்து அவர் பிரிந்த பின்பும் இன்னமும் அதே கருத்தை சொல்வதுடன் இது விடயத்தில் அடிக்கடி தடுமாற்றமான கருத்துக்களை அவர் சொல்வது கிழக்கு முஸ்லிம்களுக்கு ஆரோக்கியமானதல்ல.
இணைந்த வடக்கு கிழக்கில் தனி அலகு என்பது எமது வீட்டையும் அடுத்தவர் வீட்டையும் இணைத்து விட்டு எமக்கு ஒரு அறை மட்டும் தருவதாகும் என்பதே உலமா கட்சியின் தெளிவான நிலைப்பாடகும்.
நாட்டில் சிங்கள பேரினவாத அச்சுறுத்தல் இருப்பதற்காக வடக்கு கிழக்கை இணைக்க துணை போவது காதோடு கோபித்துக்கொண்டு கழுத்தை அறுப்பது போன்றதாகும். சிங்கள பேரினவாதத்தை முஸ்லிம்களின் வாக்குகள் மூலம் கட்டுப்படுத்த முடியாமைக்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்களின் வாக்குகள் மது, மாது, சூதுவுக்காக விற்கப்பப்பமையாகும். இதற்கு ஹசனலி, பஷீர் போன்றோர் உடந்தையாக இருந்துள்ளனர்.
முஸ்லிம்களின் உரிமைகளை எவ்வாறு சுயநலனற்ற அரசியல் காய் நகர்த்தல் மூலம் பெற முடியும் என்பதை உலமா கட்சி சாதித்துக்காட்டியுள்ளது. பணத்துக்கும் பதவிக்கும் அடிபணியாத உலமா கட்சியை முஸ்லிம்கள் ஆதரித்தால் பாரிய பல உரிமைகளை இறை உதவியால் எம்மால் பெற்றுத்தர முடியும்.
வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்ற பிற்போக்குத்தனமான முஸ்லிம் காங்கிரசின் கருத்திலேயே இன்னமும் ஹசனலி இருக்கின்றார். இது சம்பந்தமான அவரது அறிக்கையை ஊடகங்கள் திரித்து வெளியிட்டதாக அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் அவரது மறுப்பறிக்கையிலும் அஷ்ரப் வடக்கு கிழக்கு இணைவதையே விரும்பினார் என மீண்டும் சொல்லியுள்ளதன் மூலம் அதனை ஒட்டியதே தனது கருத்தும் என்பதை சொல்லியுள்ளார்.
ஆகவே வடக்கும் கிழக்கும் இப்போது இருப்பது போன்றே இருக்க வேண்டும் என்பதே உலமா கட்சியின் நிலைப்பாடாகும். இனப்பிரச்சினை தீர்வுக்கு உலமா கட்சி மட்டுமே மிகச்சிறந்த தீர்வை முன் வைத்துள்ளது.
கிழக்கு தமிழ் மக்கள் விரும்பினால் அவர்களின் பிரதேசங்களை மட்டும் வடக்குடன் இணைக்க முடியும் என்பது எம்மால் முன் வைக்கப்பட்ட தீர்வின் ஒரு பகுதியாகும் என முபாறக் மௌலவி மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment