"என்மீது வசை பாடாத ஒருவராவது இருக்கவில்லை"
“மீதொட்டமுல்லை குப்பை மேட்டுச் சரிவுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்காக, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவதற்கு நான் ஒத்துழைப்பு வழங்குவேன்” என, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
மீதொட்டமுல்ல குப்பை மேட்டுச் சரிவினால் ஏற்பட்ட ஒரு உயிரிழப்புக்கு 10 இலட்சம் ரூபாய் வீதம் ,அரச நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“இக்குப்பை மேடு சரிந்து விழுந்த தினத்தன்று, என் மீது வசை பாடாத ஒருவராவது இருக்கவில்லை. சில வலைப்பின்னல்களைப் பாவிப்பவர்கள் உட்பட சில ஊடகங்களும், நான் ஒரு மகா பெரிய பாவச்செயலை செய்துவிட்டதாகக் கூறினார்கள். சிலர் உண்மையை அறியாதவர்களாக 32 மரணங்களையும் நான் செய்ததாக, என்மீது சேறு பூசினார்கள்.
“நாங்கள் அரசியல் தலைமைத்துவத்தை பொறுப்பேற்பதாயிருந்தால், பிரச்சினைகளில் இருந்து தப்பியோடாது, அப்பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். சில வங்குறோத்து அரசியல் கட்சிகள், வெள்ளைக் கொடி உயர்த்த வேண்டிய இடத்துக்கு கறுப்புக் கொடியை கொணர்ந்து தங்களது அரசியலை மரண வீடாக்க எத்தனித்தார்கள். மக்களைத் தூண்டுவதும் கண்ணீரை விற்பதுவும் மாத்திரம் தான் இவர்களால் செய்ய முடியும்.
“என் மீது குற்றஞ்சுமத்திய பேஸ்புக் மற்றும் சில ஊடக நிறுவனங்களின் நடவடிக்கைகளை பெரிதுபடுத்தியிருந்தால், இன்று உயிரிழப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள 10 இலட்சம் ரூபாய் கிடைத்திருக்காது, இவ்வளவு விரைவாக குடிமனைகள் கிடைத்திருக்காது.
“அதேபோன்று, இந்நடவடிக்கைளின் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்காக, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவதற்காக குப்பை மேட்டு எதிர்ப்புக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர்கள் உயர்நீதிமன்றத்துக்கு செல்வதற்கான ஒத்துழைப்பை நான் வழங்குவேன். இல்லையேல், இதற்காக நான் உயர்நீதிமன்றத்துக்கு செல்வேன். இதை விசாரிப்பதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவுக்கும் சொந்த விருப்பின் பேரில் நான் சாட்சியமளிப்பேன்” என்றார்.
Post a Comment