பொருளாதாரத்தில் வீழ்ந்த இலங்கை, சவூதி அரேபியா உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருக்கிறது - ராஜித
நாம் எமது சிறு பராயத்திலே சிங்கள முஸ்லிம் இரு சமூகங்கள் மத்தியிலும் மிகவும் அன்னியோன்யமாகவும் பரஸ்பரம் சகோதரத்துவ வாஞ்சையுடனும் வாழ்ந்து வந்தோம். ஆனால் இன்று ஒரு சிலர் மதங்களை நிந்தனை செய்து வருகின்றார்கள்.
பௌத்தர்கள், பௌத்த மதத்திற்கெதிரான வார்த்தைகளைப் பிரயோகித்து வருகின்றார்கள். சிங்களவர்கள் மேலான இனத்தவர்கள் என்று பெருமையடித்து வருகிறார்கள். முஸ்லிம்கள் இங்கு சிறுபான்மை இனத்தவர்களாக வாழ்கிறார்கள்.
ஆனால் சகல இனத்தவர்களுக்கும் இங்கு வாழக்கூடிய உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள சகல இனங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். ஓர் இனம் மற்றோர் இனத்தை தாங்குவதாயின் அது வெட்கக்கேடான செயலாகும். யாருக்கும் அநீதி அட்டூழியம் இழைக்கக் கூடாது என்று சுகாதாரம், போசனை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன கூறினார்.
பேருவளை, சீனன்கோட்டை இக்ராஃ தொழில் நுட்ப பயிற்சி நிறுவனத்தின் வெள்ளி விழாவும் அதன் 24 ஆவது சான்றிதழ் வழங்கும் வைபவமும் ஜாமிஆ நளீமிய்யா கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற போது அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே டாக்டர் ராஜித மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இக்ராஃ நிறுவன முகாமைத்துவ நம்பிக்கையாளர் சபைத் தலைவர் யாகூத் நளீம் தலைமையில் இடம் பெற்ற மேற்படி வைபவத்தில் அமைச்சர் ராஜித மேலும் கூறியதாவது,
முஸ்லிம் நாடுகளில் ஏனைய இனத்தவர்களால் சுதந்திரமாக வாழ முடியாது என்று ஒரு சிலர் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். இணையத்தளங்களிலும் பதிவேற்றம் செய்கிறார்கள்.
உலகில் அப்படிப்பட்ட நாடுகள் எங்கே இருக்கின்றன என்று நான் கேட்க விரும்புகிறேன். நான் பல நாடுகளுக்கும் பயணம் செய்திருக்கிறேன். ஈராக், பலஸ்தீன் உட்பட முஸ்லிம் நாடுகளில் கிறிஸ்தவ மதத்தினர் வாழ்கிறார்கள். பலஸ்தீன் அமைச்சரவையில் கிறிஸ்தவ அமைச்சர்கள் அங்கம் வகிக்கிறார்கள்.
முஸ்லிம் நாடுகளில் வசித்து வரும் இதர சமயத்தவர்களது விகிதாசார பட்டியல் ஒன்றை எமது அமைச்சர் கபீர் ஹாஷிம் என்னிடம் தருவதாக கூறியிருக்கிறார்.
உண்மை இவ்வாறிருக்க, பொய் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இலங்கையை ஒரு பௌத்த நாடாக தவறாகக் காட்டியும் இங்குள்ள குடிசன மதிப்பீட்டில் தவறான கணக்கினைக் காட்டியும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அடிப்படை வாதிகள் இருக்கின்றனர். ஆனால் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலானோர் அப்பாவி மக்களே.
இந்நாட்டிலுள்ள அரசியல் வாதிகளும் ஒருசில ஊடகங்களுமே நாட்டைக் குழப்ப தீ மூட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இலங்கை பொருளாதாரத்தில் வீழ்ந்துள்ள நிலையில் சவூதி அரேபியா எங்களுக்கு உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருக்கிறது. இனவாதம், மதவாதம் துடைத்தெறியப்பட வேண்டும்.
அனைவரும் சமமாக கருதப்பட வேண்டும். நாம் அனைவரும் ஐக்கியப்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப முன்வரவேண்டும். இனவாதிகள் எதனைச் சொன்னாலும் நாம் அதற்கு துணை போகக் கூடாது. முஸ்லிம்கள் இனவாதி, அடிப்படைவாதிகளாக மாறக்கூடாது. நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம். பௌத்த தர்மம் மனிதாபிமானத்தையே போதிக்கிறது. ஏனைய சமயங்களும் அதனையே போதிக்கின்றன என்றார்.
-ஏ.எல்.எம். சத்தார் + விடிவெள்ளி
Post a Comment