புதிய யாப்பு மீது முஸ்லிம்களுக்கு அக்கறையும், ஆர்வமும் இல்லையா..? மந்தமாக இருப்பது ஏன்..??
-ஏ.ஜே.எம்.நிழாம்-
உத்தேச புதிய யாப்பு பற்றி நம்மில் எத்தனை முஸ்லிம்களுக்கு ஆய்வும் அக்கறையும் ஆர்வமும் இருக்கின்றன என்பது தெரியவில்லை. சிங்களவரும் தமிழரும் இதில் தீவிரம் காட்டுகையில் முஸ்லிம்களின் ஈடுபாடு மந்தமாக இருப்பதாகவே நினைக்கிறேன். மொத்தத்தில் சமூக நல விடயத்தில் ஆங்கிலேயர் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை விடவும் யாப்பு விடயத்தில் எங்களது செயற்பாடு குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாக இல்லை என்றே கூற வேண்டும்.
குறிப்பாக 1931 ஆம் ஆண்டின் டொனமூர் யாப்பு காலத்திலும் 1946 ஆம் ஆண்டின் சோல்பரி யாப்பின் காலத்திலும் சமூகத்துக்காக முஸ்லிம்கள் பாடு பட்டு முஸ்லிம்களின் விடயங்களையும் உள்நுழைத்தது பற்றி இங்கு கூறியாக வேண்டும். 1989 ஆம் ஆண்டு முதல் 1946 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த முஸ்லிம் தலைவர்களுக்கு யாப்பு விடயங்களில் ஆழ்ந்த புலமை இருந்திருக்கின்றது.
தற்போது தனித்தனி தனித்துவ கட்சிகளிலும் தேசிய கட்சிகளிலும் அரசு சார்பாக 21 முஸ்லிம் எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இனப்பிரச்சினைத் தீர்வுக்கெனப் புதிதாக ஒரு யாப்பை பல்லின வடிவில் உடனடியாக இயற்றுமாறு ஐ.நா. இலங்கையிடம் கூறியிருக்கையில் சிங்களவரும் தமிழரும் இதில் அதிக முனைப்பு காட்டுகையில் உடனே இவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளும் புதிய யாப்பில் இடம் பெறச் செய்வதற்கு தீவிரம் காட்ட வேண்டும்.
ஆங்கிலேயர் எல்லா இனத்தினரையும் சுயாதீனமாகச் செயற்பட அனுமதித்திருந்தனர். கட்சிவாத அரசியல் அதை உத்தரவாதப்படுத்தாததால்தான் பேரினப் போலி தேசிய கட்சிகளின் முஸ்லிம் தலைமைகள் பேரின யாப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிவிட்டன. தற்போது தனித்துவக் கட்சிகளின் முஸ்லிம் எம்.பி.க்களும் போலி தேசியக் கட்சிகளின் முஸ்லிம் எம்.பி.க்களும் பேரினவாதப் பிடியிலேயே இருக்கின்றார்கள்.
பாதுகாப்புத்துறையிலும் உள்ளூராட்சி நிர்வாகத்திலும் நீதித்துறையிலும் தொகுதி நிர்ணயக் குழுவிலும் சிங்களவர் 100 வீதமாக இருக்கையில் தான் அவர்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள், சிதறலாக சிறு சிறு தொகையினராக வாழ்கிறார்கள். சிறுபான்மைக் காப்பீடான 29 ஆம் ஷரத்தை நீக்கி சிங்களவர் பாதுகாப்பு உத்தரவாதத்தை யாப்பில் வழங்கிய போதும் அண்மையில் ஞானசாரரின் அட்டூழியங்களின் போது அது கிடைக்கவில்லை.
சிறுபான்மைக் காப்பீட்டுச் சட்டமான 29 ஆம் ஷரத்தும் கூட அன்று அலட்சியம் செய்யப்பட்டிருந்தது. கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமும் மலையகத்தில் தமிழ் தோட்டத் தொழிலாளரின் பிரஜா உரிமை நீக்கமும் இடம்பெற்றன.
எனவே கிழக்கைச் சாராத முஸ்லிம் எம்.பி.க்களும் கிழக்கை மையப்படுத்தியே யாப்பு விடயத்தில் இயங்க வேண்டும். ஐ.நா. கூறியபடி சிறுபான்மைகளையும் உள்ளடக்கிய யாப்பொன்றை இயற்றி அமுல்படுத்துவதாக வாக்குறுதி வழங்கியே 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன சிறுபான்மைகளின் வாக்குகளை அதிகமாகப் பெற்று வெற்றியடைந்தார். எனவே இவர், உயர் பிக்குபீடங்கள் நான்கினதும் சொல்லைக் கேட்டு சிறுபான்மைகளுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறுவது வரலாற்றுத் தவறாகிவிடும். சிறுபான்மைகள் இவருக்கு 100 வீதம் வாக்களித்திருக்கிறார்கள்.
தற்போது பல கட்சிகளையும் சேர்ந்த 21 முஸ்லிம் எம்.பி.க்களும் அரச சார்பாகவே இருக்கின்றனர். அவர்கள் ஒரே அணியாக ஞானசாரர் விடயமாக ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை.
கிழக்கில் சிங்களவரின் திட்டமிட்ட குடியேற்றத்தைத் தடுக்கவே கிழக்கு தமிழர் வடக்கோடு கிழக்கை சேர்த்துவிடுமாறு கோருகிறார்கள். அதற்கு இசைவாகவே காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைக் கோருகிறார்கள். இவை பிரிவினையோ தனிநாடோ அல்ல ஏனைய ஏழு மாகாணங்களையும் விட இணைந்த வடக்கு, கிழக்கின் விஸ்தீரணம் அதிகம் என்பது மட்டுமேயாகும். மத்திய அரசின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுக்குப் புறம்பாக மத்திய அரசுக்குட்பட்ட மாகாண ரீதியிலான காணி அதிகாரப் பிரிவும் பொலிஸ் அதிகாரப் பிரிவும் இதற்கு இருக்கும். யாப்பு மூலம் இதற்குக் காப்பீடு வேண்டும்.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் முஸ்லிம்களையும் பாதிப்பதால் தனித்து நின்று அதைத்தடுக்க முடியாது. எனவே கிழக்கை வடக்கு இணைப்பதற்குப்பகரமாக கிழக்கில் முஸ்லிம் அதிகார அலகையும் கரையோர மாவட்டத்தையும் கோரலாம். ஆக தமிழர்களும் முஸ்லிம்களும் கொடுத்து எடுப்பதன் மூலமே கிழக்கில் இரு சாராரினதும் இருப்பு, வாழ்வாதாரங்களும் வரலாறும் மொழியும் கலையும் கலாசாரமும் பாதுகாப்பும் நிலைக்கும். தொடர்ந்தும் இவர்கள் முரண்பட்டு நிற்பார்களானால் கிழக்கின் பெரும்பான்மையை இழந்து விடுவார்கள். முஸ்லிம் அதிகார அலகுக்கும் தனியாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வேண்டும்.
சிங்களவர்களுக்கு 18 மாவட்டங்களும் தமிழர்களுக்கு 7 மாவட்டங்களும் இருப்பதால் முஸ்லிம்களுக்குரிய கரையோர மாவட்டத்தையும் வழங்க வேண்டும் என்பதே நியாயமாகும். தற்போது புதிய யாப்புக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டிருக்கிறது. மல்வத்த, அஸ்கிரிய ராமன்ய, அமரபுர ஆகிய பௌத்த பீடங்கள் நான்கும் புதிய யாப்பு இயற்றப்படுவதை எதிர்க்கக் காரணம் ஒற்றையாட்சியும் பௌத்த மத, பௌத்த சாசன சிங்களமொழி முன்னுரிமைகளும் நிறைவேற்று அதிகாரமும் சுய நிர்ணய உரிமையும் இறைமையும் பௌத்தர்களிடம் இருக்கவேண்டும் என்பதற்கேயாகும்.
Post a Comment