Header Ads



அமைச்சர்கள் - பிக்குகள் இழுபறி, புதிய இராணுவத் தளபதி நியமனத்தில் தாமதம்

அமைச்சர்கள் மற்றும் பௌத்த பிக்குகளுக்கு இடையிலான இழுபறியினாலேயே, சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதி நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் கிரிசாந்த டி சில்வா கூட்டுப் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள போதிலும், புதிய இராணுவத் தளபதியாக எவரும் நியமிக்கப்படவில்லை. இதனால் இரண்டு பதவிகளிலும் அவரே தொடர்கிறார்.

இந்த நிலையில், புதிய இராணுவத் தளபதி நியமனம் வரும் நாளை மறுநாள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்கா அதிபர் செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவுர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இராணுவத் தளபதி பதவிக்கு, மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க ஆகியோருக்கு இடையில், மும்முனைப் போட்டி காணப்படுகிறது. இவர்கள் மூவருக்கும் இடையில் கடும் போட்டி ஆரம்பித்துள்ளது.

இவர்களில் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இராணுவத் தலைமை அதிகாரியாகவும், மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தொண்டர் படைகளின் தளபதியாகவும், மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மேற்குப் படைகளின் தலைமையக தளபதியாகவும் பதவியில் இருக்கின்றனர்.

மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை இராணுவத் தளபதியாக நியமிக்குமாறு அமைச்சர்கள் பலரும், சிறிலங்கா அதிபருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அதேவேளை, பௌத்த பிக்குகள் பலரும், மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேராவுக்கு இராணுவத் தளபதி பதவியை வழங்குமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையிலான இழுபறிகளினால் தான், இராணுவத் தளபதி நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.