நாம் அனைவரும், தவறு விட்டிருக்கின்றோம் - அமீர் அலி
எல்லாத் தரப்பினரிடையேயும் நல்லிணக்கம் தொடர்பான மனோநிலை ஏற்படுமாக இருந்தால் மாத்திரமே இந்நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பலாம் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியைமச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான எண்ணக்கருவை இலங்கையின் சமயம்சார் பாடசாலைக் கல்வி முறைமையினுள் நிறுவகப்படுத்தல்" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு மட்டக்களப்பு, தன்னாமுணை மியானி மண்டபத்தில் இன்று நிகழ்வொன்று இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மனித நேயம் என்பது எல்லோருக்கும் இருக்கின்றது. கடந்த காலங்களில் நமது மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் சுனாமி அனர்த்தம் உட்பட ஏனைய அனர்த்தங்கள் ஏற்பட்டபோது பெரும்பான்மைச் சமூகத்தினர் ஓடோடி வந்து உதவிகளைச் செய்தனர்.
அதேபோன்று தென்னிலங்கை மக்களுக்காக சிறுபான்மை சமூகத்தினர் ஓடிச்சென்று உதவி செய்தனர். இதுவே மனிதாபினமாகும். மனிதாபிமானம் இருப்பதால் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதென்பது மிகவும் இலகுவான காரியமாகும்.
இலங்கையில் நல்லிணக்கத்துக்கான வேலை திட்டங்களுக்காக நிதி செலவு செய்யப்படுகிறது. இந்நிலைமை வேறு நாடுகளில் கிடையாது. நாம் எப்படியாவது வாழ்ந்து விட்டுச் செல்ல முடியம். ஆனால் எங்களுடைய எதிர்காலச் சந்ததியினர் வாழ முடியாத நிலைமை ஏற்படும்.
பெரும்பான்மைச் சமயத் தலைவர்களிடம் எங்களைப் பற்றிப் பிழையாகக் கூறப்பட்டுள்ள அல்லது அவர்கள் பிழையாக எண்ணிக் கொண்டிருக்கின்ற விடயங்களையே அவர்கள் மீள மீளப் பேசுகின்றார்கள்.
சிறுபான்மைச் சமூகமான நாங்கள் எங்களின் பிரச்சினைகள் நாங்கள் செய்கின்ற விடயங்கள் பற்றி அவர்களிடம் தெளிவாக எடுத்துக்கூறி அவர்களிடமுள்ள சந்தேகங்களைக் களைய வேண்டும்.
இந்த விடயத்தில் நாம் அனைவரும் தவறு விட்டிருக்கின்றோம். அரசியல்வாதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அரசாங்க அதிபர்கள், அரசாங்க அதிகாரிகள் சமூகத் தலைவர்கள் ஒன்றிணைந்து நல்லிணக்கத்துக்கான வேலைத்திட்டத்தை அவசரமாக முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுவோமாக இருந்தால் நாம் பலதரப்பட்ட பிளவுகளைச் சந்திக்க வேண்டியேற்படும் என தெரிவித்திருந்தார்.
Post a Comment