முஸ்லிம்களுக்கு பொதுபலசேனா அழைப்பு
-ARA.Fareel-
இலங்கையில் ஐ.எஸ்.தீவிரவாதத்தையும், முஸ்லிம் அடிப்படைவாதத்தையும் அடியோடு இல்லாமற் செய்வதற்கு முற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட முஸ்லிம்கள் பொதுபலசேனாவுடன் கைகோர்க்க வேண்டுமென அவ்வமைப்பு பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
நடுநிலை வகிக்கும் சம்பிரதாய முஸ்லிம்கள், ஏனைய மக்களுடன் சமாதானமாக வாழவிரும்பும் முஸ்லிம்கள், புத்தர் சிலை மீது வெறுப்படையாத முஸ்லிம்கள் என நாட்டில் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவர்கள் எம்முடன் இணைந்து கொள்ளலாமெனவும் அழைப்பு விடுத்துள்ளது.
நாம் வேற்றுமைகளை மறந்து தாய்நாட்டின் நன்மைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் இணைந்து செயற்படுவதன் மூலம் இலங்கையில் சிங்கள, தமிழ் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைத் துடைத்தெறியலாம் என்றும் தெரிவித்துள்ளது.
ராஜகிரியவிலுள்ள பொதுபலசேனாவின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலன்த விதானகே இவ் அழைப்பினை விடுத்தார்.
இலங்கையில் ஐ.எஸ்
இலங்கையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் இல்லை என பாதுகாப்பு தரப்பும், உளவுப் பிரிவினரும், அமெரிக்க தூதரகமும் தெரிவித்தாலும் இங்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் இருக்கிறார்கள். இவர்களால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று நாம் உறுதியாகக் கூறுகிறோம்.
ஐ.எஸ். தீவிரவாதம் பற்றி பொதுபலசேனா அமைப்பு 2013 ஆம் ஆண்டில் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. அக்காலத்தில் பொதுபலசேனா ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பைப்போன்ற ஒரு இயக்கம் என்று பிரசாரம் செய்யப்பட்டது.
கடந்தகால அரசாங்கம் ஐ.எஸ்.தீவிரவாதம் தொடர்பாக நாம் எவ்வளவு எடுத்துக் கூறியும் அதில் கவனம் செலுத்தவில்லை. பாதுகாப்பு பிரிவினரால் அன்று ஐ.எஸ்.தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் முஸ்லிம் நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கு உதவி வழங்கி வந்ததால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இலங்கையிலிருந்து உயர்கல்விக்கான புலமைப் பரிசில் பெற்று பாகிஸ்தான், சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்குச் சென்றவர்கள் தீவிரவாதத்துடன் தொடர்பு பட்டவர்களாகவே நாடு திரும்பினர். இவ்வாறு மாற்றங்களுக்குள்ளாகி திரும்பியிருக்கிறார்கள் என அவர்களது பெற்றோரே எம்மிடம் புகார் செய்திருக்கிறார்கள்.
அளுத்கம சம்பவம்
2014 இல் இடம்பெற்ற அளுத்கம சம்பவம் ஐ.எஸ். உடன் தொடர்புபட்டது என நாம் உறுதியாகக் கூறுகிறோம். ஐ.எஸ். உடன் இச்சம்பவம் தொடர்பு பட்டதனாலே மஹிந்த ராஜபக் ஷவோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவோ எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை. அளுத்கம சம்பவத்தின் பின்னணியில் ஞானசார தேரரே இருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டது.
ஆனால் ஞானசார தேரர் அளுத்கமவுக்கு செல்வதற்கு முன்பு அங்குள்ள பள்ளிவாசலுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் கொழும்பு மற்றும் காத்தான்குடியிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்தார்கள். இச்சம்பவம் ஐ.எஸ். உடன் தொடர்பு பட்ட குழுவினராலே முன்னெடுக்கப்பட்டது.
ஐ.எஸ்.ஸின் இஸ்லாமிய இராச்சியம்
ஐ.எஸ்.அமைப்பின் இஸ்லாமிய இராச்சியத்தின் வரை படத்தில் இலங்கை ஒரு மூலையில் வரையப்பட்டுள்ளது. அதனால் இலங்கையில் ஐ.எஸ்.தீவிரவாதம் காலூன்றி உள்ளது என்பதை நிச்சயமாகக் கூறமுடியும். இலங்கையில் வஹாபிசம், இஸ்லாமிய தீவிரவாதம் காலூன்றி செயற்படுவதாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் ரியாஸ்சாலி என்போர் 2007 ஆம் ஆண்டிலே தெரிவித்திருந்தனர்.
இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதம் இல்லையென முஸ்லிம் அரசியல் தலைவர்களும், மற்றும் சில அமைச்சர்களும் கூறுகிறார்கள். ஆனால் அவர்களது கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. ஐ.எஸ். தீவிரவாதம் தொடர்பாக கடந்தகால ஜனாதிபதியிடமும் முறையிட்டோம். இன்றைய ஜனாதிபதியிடமும் முறையிட்டுள்ளோம். கடிதம் அனுப்பி வைத்துள்ளோம். அரசாங்கம் அவசரமாக இப்பிரச்சினையைக் கையாள வேண்டும்.
Post a Comment