தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்கின்றது...
இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்ற தடை உத்தரவு அரசியல் சாசன உரிமையை நிலைநாட்டும் விதமான தீர்ப்பாக இருப்பதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக TNTJ பொதுச்செயலாளர் முஹம்மது யூசுப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாடுகளை இறைச்சிக்காக சந்தையில் விற்கக்கூடாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் மாடு வளர்க்கும் ஏழை விவசாயிகளும், மாடு விற்பனையை சார்ந்துள்ள பல லட்சம் வியாபாரிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
மழை பொய்த்து விவசாயம் இல்லாத நிலையில் தங்களிடம் இருக்கும் மாடுகளை விற்றாவது தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளலாம் என நினைத்தவர்களுக்கு மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் கொடுமையாக இருந்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்தனர். இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதை தடைசெய்வது என்பது சட்ட விரோதமானது, அரசியல் அமைப்பிற்கு எதிரானதுஎன்று மனுவில் தெரிவித்திருந்தனர்.
அதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தது. மாடுகளை இறைச்சிக்காக விற்பதில் தடை நீங்கியதால் மாடு வளர்ப்போரும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இந்தத் தீர்ப்பை நாடு முழுவதும் அமுல்படுத்தலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு மூலம் மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், விவசாயிகள் மற்றும் இறைச்சித் தொழில் செய்யும் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் சீராகும்.
அரசியல் சாசன உரிமையை நிலைநாட்டும் விதமாக உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்கின்றது.
மேற்கண்டவாறு முஹம்மது யூசுப் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Post a Comment