'உலகிலேயே மிகவும் கீழ்த்தரமான சித்திரவதை, இலங்கையில் காணப்படுகின்றது'
இலங்கை அரசாங்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் செயற்பாட்டில் எவ்விதமான முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தாமல் இருக்கின்றது. முன்னேற்றமானது தாமதமடைந்துள்ளது என்பதுடன் அந்த நடவடிக்கை களரீதியாக நிறுத்தப்பட்டுவிட்டது என்றே கூறவேண்டும்.
தற்போதைய கள நிலைமையை பார்க்கும் போது அரசாங்கம் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நீதியை நிலைநாட்டும் என எதிர்பார்ப்பது கடினமாக உள்ளது. இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்தின் பொறுமைக்கும் எல்லை இருக்கின்றது என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பயங்கரவாதத்தை ஒடுக்கும் போது அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமையை பாதுகாப்பது தொடர்பான ஐ.நா.வின் விசேட நிபுணர் பென் எமர்சன் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை நிலைநாட்டாவிடின் பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெறலாம். ஐரோப்பிய ஒன்றியத்தின் சலுகைகளை இலங்கை இழக்கலாம். ஐ.நா. மனித உரிமை பேரவையில் உள்ள இந்த விவகாரம் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு செல்லலாம். இவ்வாறு பல நிலைமைகள் ஏற்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பல்வேறு வகையான சித்திரவதைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். உலகிலேயே மிகவும் கீழ்த்தரமான சித்திரவதை நிலைமை இலங்கையில் காணப்படுகின்றது. தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அல்லது பிணையில் விடுவிக்கவேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துகின்றேன் என்றும் அவர் கூறினார்.
பயங்கரவாத தடை சட்டமானது இன்றுவரை தமிழ் சிறுபான்மை மக்களை பாதிக்கும் ஒரு சட்டமாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது புதிதாக உருவாக்கப்படுகின்ற சட்டமூலம் தொடர்பாகவும் விமர்சனங்கள் உள்ளன. இந்த விடயங்களை ஆராய்ந்து சர்வதேச தரத்திற்கு அமைய புதிய சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவரவேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை ஊக்குவிப்புக்கள் தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக வருகை தந்திருந்த ஐ.நா.வின் விசேட நிபுணர் பென் எமர்சன் தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புவதற்கு முன்பதாக கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினார். அதில் தனது மதிப்பீடுகளை வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
Post a Comment