பௌத்த கும்பலினால், ரொஹிங்கியா முஸ்லிம் அடித்துக்கொலை
மியன்மாரின் ரகினே மாநில தலைநகரில் பெளத்த மதத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று ரொஹிங்கியா முஸ்லிம் ஒருவரை கற்களால் தாக்கி கொலை செய்திருப்பதோடு மேலும் ஆறு பேருக்கு காயம் ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு மாநிலத்தில் நீடித்து வரும் ரகினே பெளத்தர்கள் மற்றும் ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு இடையிலான கலவரங்களின் தொடர்ச்சியாகவே நேற்று முன்தினம் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இரு சமூகங்களுக்கும் இடையில் 2012இல் இடம்பெற்ற மோசமாக வன்முறைகளில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
எனினும் நல்லிணக்க முயற்சிகள் குறைவாக இடம்பெற்று வரும் நிலையில் அங்கு தொடர்ந்து பதற்ற சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் ரகினே இன பெளத்தர்களைச் சேர்ந்த கும்பல் ஒன்று ஏழு ரொஹிங்கிய ஆண்கள் மீது செங்கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
ரொஹிங்கியா இனத்தைச் சேர்ந்த ஒருவர் உள்ளூர் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து படகொன்றை கொள்வனவு செய்யும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
அப்போது பாதுகாப்புக்கு இருந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் வெளியேறி இருப்பதோடு சம்பவம் தொடர்பில் ஒருவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment