நடக்காத கதை...
அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்தில் விரைவில் சுயாதீனமாக இயங்கத் தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச் செய்தி முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் சந்தோசமளிப்பதாக இருந்தாலும் யதார்த்தத்தில் நடக்கக் கூடியது அல்ல என்பதே கசப்பாயினும் உண்மையாகும்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான சம்பவங்கள் நடந்தேறின. குறிப்பாக அளுத்கம வன்முறை இந்த சம்பவங்களின் உச்சக்கட்டமாகும்.
அச் சமயத்தில் முஸ்லிம் எம்.பி.க்கள் அப்போதைய அரசாங்கத்திற்கான தமது ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என முஸ்லிம் சமூகத்திலிருந்து பலமாக குரலெழுப்பப்பட்டது. குறித்த வன்முறைகளை நேரில் பார்வையிடச் சென்ற முஸ்லிம் அமைச்சர்களிடம் அப் பகுதி மக்கள் நேரடியாகவே காட்டமான முறையில் இக் கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
எனினும் துரதிஷ்டவசமாக ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் கூட அப்போது தனது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளவில்லை.
எந்தளவுக்கெனில், கடந்த ஆட்சியாளர் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையப் போகிறார் என்பது உறுதியாகும் வரையில் முஸ்லிம் கட்சிகளும் அதன் தலைவர்களும் அவருடனேயே ஒட்டியிருந்தனர். தபால் மூல வாக்களிப்பு முடிந்ததன் பின்னரே பிரதான முஸ்லிம் கட்சி தனது ஆதரவை பொது வேட்பாளருக்கு வழங்குவதாக அறிவித்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இதற்கான காரணம் முன்னைய ஆட்சியாளரே மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் அவருடன் இணைந்து அமைச்சுப் பதவி உள்ளிட்ட வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு ஆட்சியின் பங்காளர்களாக தொடர்ந்திருக்க வேண்டும் எனும் உள்நோக்கமேயாகும்.
இவ்வாறு முஸ்லிம் கட்சிகளும் எம்.பி.க்களும் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க முனைந்தமையில் செல்வாக்குச் செலுத்தியது சமூகக் காரணிகள் அன்றி தனிப்பட்ட அரசியல் இலாபங்களே என்பதும் இங்கு வெள்ளிடை மலையாகும்.
அவர்கள் எதிர்பார்த்தது போலவே பொது வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவானமையும் அதனைத் தொடர்ந்து வந்த தேசிய அரசாங்கம் ஆட்சியமைத்தமையும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு மென்மேலும் வரப்பிரசாதங்களைக் கொண்டு வருவதாகவே இருந்தது. அதனால்தான் இம் முறை பாராளுமன்றத்திற்குத் தெரிவான 21 முஸ்லிம் எம்.பி.க்களுமே ஆளும்தரப்பிலேயே அங்கம் வகிக்கின்றனர். பலர் அமைச்சர்களாக, பிரதி அமைச்சர்களாக பதவிகளையும் வகிக்கின்றனர்.
இவர்கள் முஸ்லிம் சமூகம் நெருக்கடியான சூழலை எதிர்கொள்கின்ற சமயங்களில் மாத்திரம் பாராளுமன்றில் உரையாற்றுவதாக கூறிக் கொண்டாலும் அதன் மூலமாக சமூகத்திற்கு எந்தவித பலனும் கிட்டவில்லை. இந்த உரைகளால் அரசாங்கத்தின் இருப்பில் எந்தவித ஊசலாட்டங்களையும் நிகழ்த்த முடியவில்லை.
இதனால்தான் முஸ்லிம் எம்.பி.க்கள் அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்புகளாலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அதனை அடிப்படையாகக் கொண்டே தற்போது மேற்படி செய்தியானது ஊடகங்களில் வலம் வருவதைக் காணமுடிகிறது.
எனினும் இச் செய்திகள் நம்பத்தகுந்தவையாக இல்லை. அவ்வாறு முஸ்லிம் எம்.பி.க்களில் சிலர் கூறியிருந்தாலும் அது வெறும் வாய்ப் பேச்சாக இருக்குமேயன்றி நடக்காது என்பது மட்டும் திண்ணம்.
இன்றைய முஸ்லிம் அரசியல் பதவிகளையும் சலுகைகளையும் அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளதே அன்றி சமூகத்தின் உரிமைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல.
அந்த வகையில் சமூகத்தின் இக்கட்டான கால கட்டங்களில் தமது பதவிகளைத் துறந்து உரிமைகளைப் பாதுகாக்கத் திராணியற்றவர்கள் இப்போது மாத்திரம் பதவிகளை துறப்பார்கள் என்றோ சுயாதீனமாக இயங்குவார்கள் என்றோ நாம் கருதுவோமாயின் அது நமது நப்பாசையே அன்றி வேறில்லை.
-விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்-
Post a Comment