சட்டவிரோத இஸ்ரேலில், மோடிக்கு அமர்க்கள வரவேற்பு
இஸ்ரேல் செல்லும் முதல் இந்தியப் பிரதமரான நரேந்திர மோடியை வரவேற்க, அந்த நாடு ஆர்வமுடன் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டில் அடுத்த மாதம் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இஸ்ரேல் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்-அவிவ் நகரில் உள்ள பென்-குரியன் விமான நிலையத்தில் ஜூலை 4-ஆம் தேதி வந்திறங்கும் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது குழுவினருடன் நேரில் சென்று வரவேற்கிறார். மோடியை வரவேற்கும் நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஸ்ரேலியப் பாடகர் லியோரா இத்ஸாக், இந்தியா மற்றும் இஸ்ரேல் நாட்டு தேசிய கீதங்களைப் பாடவிருக்கிறார்.
அன்றைய இரவே, தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மோடிக்கு நெதன்யாகு இரவு விருந்து அளிக்கவிருக்கிறார். மீண்டும் மறுநாள் சந்திக்கவிருக்கும் இரு தலைவர்களும், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் இல்லத்திலேயே நடைபெறும் மதிய விருந்தில் மோடி பங்கேற்கிறார். அதன் பிறகு, மோடி, நெதன்யாகு இருவரும் ஒன்றாக ஜெருசலேம் நகருக்குச் செல்கின்றனர். அங்கு இஸ்ரேலிய அருங்காட்சியகத்தை நரேந்திர மோடிக்கு நெதன்யாகு சுற்றிக் காட்டுகிறார். கொச்சி நகரிலுள்ள யூத தேவாலயத்தின் மாதிரி வடிவம் உள்பட பல்வேறு அரும்பொருள்களை மோடி பார்வையிடுகிறார்.
இஸ்ரேலுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களுடனேயே ஒரு இஸ்ரேல் பிரதமர் சென்று இவ்வாறு உபசரிப்பது அரிதிலும் அரிதான ஒன்று எனக் கூறப்படுகிறது. கொள்கை மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதில் இரு தலைவர்களிடையே காணப்படும் ஒற்றுமையே இந்த இணக்கத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்குமான நல்லுறவில் மோடியின் சுற்றுப் பயணம் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
Post a Comment