தேவாலயம் அருகே மஞ்சள் கடவையில், சோற்றுப் பொதிக்காக ஒருவர் குத்திக் கொலை
நீர்கொழும்பு பிரதான வீதியில் கத்தோலிக்க தேவாலயம் அருகில் உள்ள மஞ்சள் கடவையில் யாசகர் ஒருவர் மற்றொரு யாசகரினால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 65 வயது மதிக்கத்தக்க பத்மநாதன் என அறியப்படும் யாசகரே இவ்வாறு குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை கொலை செய்ததாகக் கூறப்படும் மற்றொரு யாசகரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
சோற்றுப் பொதி ஒன்றினைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் கத்திக் குத்தில் முடிவடைந்துள்ளதாகவும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை அருகில் உள்ள வடிகானில் இருந்து பொலிஸார் மீட்டதாகவும் நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,
பத்மநாதன் எனும் யாசகருக்கும் சந்தேக நபருக்கும் இடையே கடந்த மூன்று வருடங்களாக தனிப்பட்ட பிரச்சினை ஒன்று இருந்து வந்துள்ளது. இந் நிலையில் நேற்று நண்பகல் 12.35 மணியளவில் யாசகத்தின் இடையே சோற்றுப் பொதி ஒன்று கிடைத்துள்ளது. இந்த சோற்றுப் பொதியை மையப்படுத்தி பத்மநாதனுக்கும் சந்தேக நபரான யாசகருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேக நபர் பத்மநாதனை துரத்திச் சென்று நீர்கொழும்பு பிரதான வீதியின் மஞ்சள் கடவையில் வைத்து பலர் பார்த்திருக்க கத்தியால் குத்தியுள்ளார்.
இதனையடுத்து படுகாயமடைந்த பத்மநாதன் உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள போதும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தையடுத்து அங்கு போக்கு வரத்து கடமையில் இருந்த பொலிஸார் உடனடியாகவே கத்தியால் குத்திய யாசகரைக் கைது செய்துள்ளனர். குத்தியதும் அந்த கத்தியை யாசகர் அருகில் உள்ள வடிகானில் வீசிய போதும் பொலிஸார் பின்னர் அதனை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லரின் ஆலோசனையின் கீழ் நீர்கொழும்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment