Header Ads



விமர்சனங்களுக்கு உள்ளாகும், முஸ்லிம்களின் வர்த்தக செயற்பாடுகள்

இலங்கையில் 30 வருடங்களாக பயங்கரவாதமும் இன முரண்பாடுகளும் தலைவிரித்தாடின. பயங்கரவாதத்துக்கெதிரான போரை வெற்றிகொண்டு, அதனை நாட்டின் இரண்டாவது சுதந்திர தினமாகக் கொண்டாடியும் 8 வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் சில காலத்தில் கொடிய பயங்கரவாதத்தை வெற்றிகொண்ட ஒரு தசாப்தமென்று அதனையும் கொண்டாட ஆயத்தமாவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டாலும் நாட்டு மக்களின் உள்ளங்கள் ஒன்றிணையவில்லை. கொடியதோர் யுத்தம் முடிவுற்று ஒரு தசாப்த காலத்தை அடைய முன்பே நாட்டில் மீண்டுமொரு இனவாத சூழல் ஏற்பட்டுள்ளது. மூவின மக்கள் மத்தியிலும் ஏதோவோர் மனக்கசப்பு தொடர்கின்றது. மக்கள் மனம் ஒன்றுபட வேண்டுமானால் மக்கள் மத்தியிலுள்ள சந்தேகங்கள், தப்பபிப்பிராயங்கள் நீங்கவேண்டும்.

இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயற்பாடுகளும், இனவெறுப்பு பிரசாரங்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றதைக் காணலாம். ஒருபுறம், இனவாதிகளின் செயற்பாடுகள் மீண்டும் இலங்கைத் தீவில் இரத்த வாடை மீது ஆசைவைப்பதைப் போன்றுள்ளது. மறுபுறம், என்னதான் ஏற்பட்டாலும் தமது செயற்பாடுகள், நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள மாட்டோம் என்பது போல் இருக்கும் சில முஸ்லிம்கள்.

முஸ்லிம்கள் மீதான இனவாத, இனவெறுப்பு பிரசாரங்கள் மேலோங்குவதற்கு முஸ்லிம்களின் சில செயற்பாடுகளும், நடைமுறைகளும் காரணமாக அமைந்துள்ளன என்ற உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். முஸ்லிம்கள் இலங்கையில் 1200 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம் முன்னோர்கள் வியாபார சமூகமாக அறிமுகமாகி, வியாபாரத்தில் காட்டிய உண்மை, நேர்மை, நம்பிக்கை,நீதி போன்றவற்றால் பெரும்பான்மை மக்கள் மனங்களில் இடம்பிடித்திருந்தனர். இதனால் இலங்கையில் இஸ்லாமும் பரவியது. தேசத்துக்கு பங்களிப்பு செய் வோராக அவர்கள் இருந்துள்ளனர்.

திறமை, பண்பாடுகளினூடாகவே முஸ்லிம்கள் வியாபாரத்தில் முன்னிற்கின்றனர். முஸ்லிம்கள் எவ்வாறு முன்னேற்றமடைந்தார்களோ அவ்விதம் முயற்சித்து முன்னேற வேண்டுமே தவிர கடைகளுக்கு தீ வைத்து முன்னேற முடியாது என்று மறுமலர்ச்சி இயக்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் விஜய உந்துபிடிய அண்மையில் தெரிவித்திருந்தமை முஸ்லிம் வியாபாரிகளின் செல்வாக்கை காட்டுகின்றது.

இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. போதைப் பொருள் கடத்தல், ஊழல், களவு இன்னும் பல சமூக விரோதச் செயல்களின் பின்னணியில் முஸ்லிம் வர்த்தகர்களின் பெயர்களும் நாளாந்தம் வெளிவர ஆரம்பித்துள்ளன. முஸ்லிம்களின் கடைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்யக்கூடாது என்ற பிரசாரமும் சூடுபிடித்துள்ளது. இவ்விடயம் இனவாதமாக தென்பட்டாலும், இதற்கு முஸ்லிம்களின் சில காரணிகளும் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதை மறந்துவிட முடியாது.

முஸ்லிம்கள் நடத்தும் சாப்பாட்டுக் கடைகள் சுத்தமில்லாமலும், இறைச்சிக் கடைகளில் இரத்தம் வடிந்துகொண்டும், விற்பனை நிலையங்களில் நியாயமான இலாபத்தை தாண்டி அதிக விலை, பொய், ஏமாற்று போன்றன பெரும்பான்மையினரை வெறுப்படையச் செய்துள்ளன. இவை அனைத்து முஸ்லிம்களையும் குறித்துக் காட்டாவிட்டாலும், முஸ்லிம்கள் இவ்வாறு என்ற மோசமான பிரசாரங்களே முன்னெடுக்கப்படுகின்றன. முகநூலிலும், சமூக வலைத்தளங்களிலும் இதுபற்றி இன்று பரவலாகப் பேசப்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

சமூகங்களுக்கிடையிலான தப்பெண்ணங்கள், சந்தேகங்கள் களையப்படும் போதே நல்லிணக்கம் சாத்தியமாகும். முஸ்லிம்களின் சில விரும்பத்தகாக செயற்பாடுகள் நடுநிலை பெரும்பான்மையினத்தவர்களையும் வெறுப்படையச் செய்யக்கூடாது. இலங்கை முஸ்லிம்கள் தம் மீது பெரும்பான்மையினர் வைத்துள்ள நம்பிக்கை வீண்போகும் முறையில் நடந்துகொள்ளக்கூடாது. பொருளாதார சமூகமாக பிரபல்யம் பெற்றுள்ள முஸ்லிம்கள் தம் நீதியான பொருளாதார முறையைக்கொண்டு இஸ்லாம், முஸ்லிம்கள் மீது நல்லெண்ணம் மலர வழிசெய்ய வேண்டும்.

நவமணி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்

No comments

Powered by Blogger.