ஊடகவியலாளர் மெல் கொலை, கொலையாளிக்கு மரண தண்டனை
ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை வழக்கில் கொலையாளிக்கு மரண தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிரேஷ்ட பெண் வணிக ஊடகவியலாளரும், சண்டே டைம்ஸ், ஏ.எப்.பி. போன்ற ஊடகங்களின் முன்னாள் ஊடகவியலாளருமான மெல் குணசேகர கொலை வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் மெல் குணசேகரவை கொலை செய்துவிட்டு அவரது கையடக்கத் தொலைபேசியை கொள்ளையிட்டமை ஆகிய குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏ.ஜோர்ஜ் அல்லது ' பெயின்ட் பாஸ்' என அறியப்படும் பிரதிவாதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகள் நிறைவுற்றுள்ள நிலையிலேயே, இன்று அந்த வழக்கின் தீர்ப்பானது மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி முதல் இடம்பெற்ற நீண்ட விசாரணைகள் நிறைவுற்றுள்ள நிலையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி தலங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பத்தரமுல்ல பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த மெல் குணசேகர சமையலறையில் இருந்த கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தார். அத்துடன் மெல் குணசேகரவின் பிளக்பெரி ரக தொலைபேசியும் 1200 ரூபா பணமும் வீட்டில் இருந்து கொள்ளையிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் விசாரணை செய்த மிரிஹான பொலிஸார் சி.சி.ரி.வி., கொள்ளையிடப்பட்ட பிளக்பெரி தொலைபேசி ஆகியவற்றை மையப்படுத்தி சந்தேக நபரைக் கைது செய்ததுடன் அந்த பிளக்பெரி தொலைபேசியையும் கொள்ளையிடப்பட்ட பணத்தில் 720 ரூபா மிகுதியையும் மீட்டனர்.
இந் நிலையில் மெல் குணசேகரவின் வீட்டுக்கு வர்ணம் பூச வந்தவரே இந்த கொலையை செய்துள்ளமையும் திருடுவதற்காக வீட்டுக்குள் புகுந்த போது மெல் குணசேகர அங்கு இருந்ததை அவதானித்து இந்த கொலையை அவர் செய்திருந்தமையும் விசாரணைகளில் உறுதியானது.
குறித்த சந்தேக நபரை பிரதிவாதியாக குறிப்பிட்டு மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பே இன்று -05- வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment